பாதக மிகுதியோர் பதிதர் மூர்க்கர்கள் போதமில் கயவர்கள் புலைய ராயினும் மாதர்வண் காஞ்சியின் வதிவ ராயிடின் கோதறு கலியினின் முத்தி கூடுவார். 102 | பெரும் பாவிகள், ஒழுக்கமில்லாதவர், இழிசெயலில் விடாப்பிடியர், அறிவில்லாத கீழ்மக்கள், புலைத்தொழிலர் என்ற இவரே யாயினும் அழகிய வழங்குதலையுடைய காஞ்சியில் வாழ்க்கையராயிடின் குற்றமற்ற முத்தியை கலியுகத்தில் எய்துவர். ஒளவியங் கொலைகள வாதி மிக்குடைக் கௌவைகூர் கொடுந்திறற் கலியு கத்திடைத் தெய்வதக் காஞ்சியந் தேயத் தன்றிமற் றெவ்விடத் தெய்தினும் முத்தி இல்லையே. 103 | பொறாமையும், கொலையும், களவும் பிறவும் மிக்குள்ள துன்ப மிகும் கொடுமை மிண்டிய கலியுகத்தில் தெய்வத்தன்மை பொருந்திய காஞ்சி புரத்தி லன்றிப் பிற தெய்வத் தலங்களில் எங்குறைந்தாலும் முத்திப்பேறு இல்லையாகும். இல்லைவை திகநெறி இல்லை நல்லறம் இல்லைநால் வருணம்ஆச் சிரமம் இல்லையாம் இல்லைமா ணாக்கர்கள் இல்லை ஆசிரியர் இல்லைநல் லொழுக்கமுங் கலியின் என்பவே. 104 | இல்லை வேதவொழுக்கங்கள்; இல்லை சிவபுண்ணியங்கள்; இல்லை நால்வகை வருணங்கள்; பிரமசரியம் முதலாம் ஆச்சிரமங்களும் இல்லையாகும்; இல்லை உரிய குணங்களமைந்த மாணாக்கர்; உரிய பண்புகள் அமைந்த ஆசிரியர் இல்லை; நல்லொழுக்கமும் கலிகாலத்தில் இல்லை எனக் கால இயல்பை அறிந்தோர் கூறுவர். வைதிக சைவநூல் மானக் கோள் இலை பொய்யில்ஐந் தெழுத்திற்கண் மணியிற் பூதியில் ஐமுகப் பிரானிடத் தன்பும் இவ்வுலகத் தெய்திடும் இருபிறப் பாளர்க் கில்லையே. 105 | வேதசிவாகமங்கம நூல்களிற்பெறும் சிறந்த குறிக்கோளும் இல்லை. மெய்ம்மை அமைந்த ஐந்தெழுத்தும் உருத்திராக்கமும் திருநீறும் ஆகிய சிவகாதனங்களிடத்தும் சிவபிரானிடத்தும் அன்புதானும் இந்தக்கலியுகத்தில் இருபிறப்பாளர் எனப்படும் பிராமணர்கட்குச் சிறிதும் இல்லை. |