சிவபுண்ணியப் படலம் 779


திருமாலையும் விண்ணவரையும் உலகையும் முறையே படைத்தருளினர்
முக்கண் முதல்வர்.

மன்னு நான்மறை வேதியர் மன்னவர் வணிகர்
பின்னு ளோருடன் வீடறம் பெரும்பொருள் காமம்
என்னு நான்கினை இசைவுறத் தோற்றிஇந் நான்கிற்
பன்னு சீர்உகப் பெயரிய நான்கையும் படைத்தான்.      110

     நிலைபெறும் நான்கு வேதங்களை ஓதுகின்ற வேதியர், அரசர்,
வணிகர், நான்காமவருடன் மேலும் வீடு, அறம், பொருள், இன்பம் என்னும்
நான்கனையும் தோற்றுவித்து இந்நாற்பொருளையும் முறையே சிறப்பாக
வழங்கும் கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்னும்
நான்கு யுகங்களையும் படைத்தனர்.

கனிந்த காதலால் அன்னவை காஞ்சியைக் குறுகி
அனந்த பற்பநா பேச்சரந் தனக்கயல் வடபால்
மனந்த ழைத்திடச் சிவக்குறி நிறுவிநாண் மலர்கள்
புனைந்து போற்றிநின் றருந்தவம் ஆற்றிடும் பொழுது.   111

     அந் நான்கு யுகங்களும் காஞ்சியை அணுகி அனந்தபற்பநாபே
சத்திற்தடுத்த வடபுறத்தில் முதிர்ந்தெழுந்த அன்பொடும் உள்ளந் தழைப்பச்
சிவலிங்கம் தாபித்து அன்றலர்ந்த மலர்களைச் சாத்திப் போற்றி இருந்து
செயற்கரிய தவத்தைச் செய்யும்பொழுது.

கம்ப நாயகர் விடைமிசைக் காட்சிதந் தருளி
இம்பர் வேட்டது விளம்புமின் தருதும்என் றருள
வம்பு லாமலர் தூய்த்தொழு திறைஞ்சிவாழ்த் தெடுத்துத்
தம்பி ரான்எதிர் உகங்கள்மற் றின்னது சாற்றும்.      112

     திருவேகம்பர் விடைமிசை எழுந்தருளித் திருகாட்சி தந்து
‘இந்நிலையில் விரும்பிய பொருளைக் கூறுமின் தருவேம்’’ என்றருள்
செய்ய, மணங்கமழும் மலர்களைத் திருவடியில் தூவித் தொழுது வாழ்த்தி
உயிர்களுக்குத் தலைவனார் முன்பு யுகங்கள் கீழ் வருவனவற்றைக் கூறும்.

நரகும் வானமும் நல்கிடும் பனிவரைத் தென்பாற்
கரும பூமியை யாம்பகுத் தாள்கருத் துடையேம்
பெரும நீபகுத் தெங்களுக் கருளெனப் பேசித்
திருவ டித்துணை பழிச்சலுஞ் சேவுடைக் கொடியோன்.    113

     ‘பெருமானே! நரகையும் சுவர்க்கத்தையும், முத்தியையும் வழங்குதற்
கிடனாகிய இமயமலைக்குத் தென்பாலுள்ள கருமபூமியை யாங்கள் பிரித்து
ஆளும் அவாவுடையோம். நீ பிரிந்து எங்களுக்கு அருள் செய்யெனக்
குறையிரந்து துதிசெய்த அளவே விடைக்கொடியை உடைய பெருமானார்,