78காஞ்சிப் புராணம்


     ஆற்றின் அக்கரையிலுள்ள பசுவிற்கு அங்கு வெளிறு காணப்பட்டு
இங்குப் பசுமை மிகுந்து தோன்றும். இங்கு வந்து காணும் போது அப்பசுவிற்கு
அங்கே பசுமை மிகுதியாகத் தோன்றி ஓடும். சென்றும் மீண்டும் பன்முறையும்
உழலுதலை அக்கரைக்கு இக்கரை பச்சை, இக்கரைக்கு அக்கரை பச்சை
எனவும், தூரத்துப் பச்சை எனவும் கூறுவர்.

கதிர்செய் மாடமேல் புலவிதீர் கலவியின் முடிவின்
வெதிர்செய் தோளியர் கொண்கர்தம் மருமமேல் வதனம்
பதிய வைத்தனர் துயிலுவர் அற்றம்பார்த் திருந்து
புதுமு கத்தெழில் உடுபதி வௌவுறாப் பொருட்டே.   87

     சோர்வு பார்த்திருந்து முகத்துப் புதிய அழகை விண் மீன்களின்
நாயகனாகிய சந்திரன் கவர்ந்து கொள்ளாமைப் பொருட்டு ஒளி வீசுகின்ற
மேன் மாடத்துள் ஊடல் தீர்ந்து கூடிய கூட்டத்தின் இறுதியில், மூங்கிலை
ஒத்த தோளினையுடைய மகளிர் தம் கணவருடைய மார்பின் மேற்புறத்தில்
தோன்றாதபடி உறங்குவர்.

     புலவி இல்வழியும், மிக்கவழியும் இன்பில்லையாகலின் ‘புலவி தீர்கலவி’
என்றனர். செய் உவம வுருபு. அற்றம்-சோர்வு. ‘விளக்கற்றம் பார்க்கும்’
(திருக்.) புது எழில்-புணர்ச்சியா னமைந்த அழகு.

தேங்கும் ஊடலின் மாதரார் பறித்தெறி செங்கேழ்
ஓங்கு பன்மணி அவரடி வருந்திநைந் துளைய
ஆங்கு நாள்தொறும் பைதுறுத் தவிர்வன கொடிதாத்
தாங்கள் செய்வினை தங்களுக் கேபகை யாமே.     88

     நிறைந்த புலவியுள் மகளிர் பறித்து வீசிய செவ்வொளி முதிர்ந்த பல
மாணிக்கங்கள் அம்மகளிரடிகள் வருந்தி உள்ளம் மெலிந்து வருந்த
அவ்விடத்து நாடொறும் வருத்தம் செய்து விளங்கா நின்றன. தாங்கள்
செய்தீவினை தங்களுக்குப் பகையாய் நின்று வருத்துதலைப் புலப்படுத்தும்.

     துன்பத்தால் உள்ளம் இருள் கூர்தலில் பசுமை உறல் (பைது+உறல்)
என்ப.

விருந்து நாள்தொறும் இடையறா தெதிருமே தகவால்
அருந்தி றற்சிறு புதல்வர்சூழ்ந் தணுகிடுந் திறத்தான்
முருந்து மூரலார்க் காயிடைக் கொழுநர்பால் மூண்ட
மருந்தில் ஊடலுஞ் சிறுவரை யன்றிமே வாதால்.    89

     விருந்தினரை நாளும் இடையீடின்றி எதிர்கொள்ளும் மேன்மையாலும்,
அரிய திறலினையுடைய தம் இளம்புதல்வர் சூழுங் கூறுபாட்டானும்
மயிலிறகின் அடியினையொத்த பற்களையுடைய தலைவியர்க்குத்
தலைவரிடத்துத் தோன்றிய பரிகரிக்கும் வாயில்களைக் கடந்த புலவியும்
சிறு பொழு தளவன்றி நெடும் பொழுது நில்லாது.