சிவபுண்ணியப் படலம் 781


     கிருதயுகம் நாற்கூறுகொண்டு பதினேழு லட்சத்து இருபத்தெட்டாயிரம்
ஆண்டுகள் ஆட்சிசெய்க. திரேத யுகம் முக்கூறுகொண்டு பன்னிரண்டு
லட்சத்துத் தொண்ணூற்றாறாயிரம் வருடங்கள் ஆணையைச் செலுத்துக.
துவாபரயுகம் இறுகூறுகொண்டு எட்டு லட்சத்து அறுபத்து நான்காயிரம்
வருடம் அரசாள்க. கலியுகம் ஒரு கூறுகொண்டு நான்கு லட்சத்து
முப்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்க. நாற்குலத்து
மனைவியரிடத்தும் முறையே பெறும் மக்கட்கு முறையே பொருளும் நான்கு,
மூன்று. இரண் டொன்று என்றிங்ஙனம் தாயபாகம் பெறுவராகுக.

     இவ்விடையேற் றறக்கடவுள் முறையானே எழிற்கிருத முதலீர்
நும்மை, எவ்வமறு நாற்பாதம் முப்பாதம் இருபாதம் ஒருபா தத்தாற்,
கௌவையற நடத்திடநீர் காசினியை நடாத்திடுமீன் முதல்மூவிர்க்கும்,
ஒளவியமில் அம்புயத்தோன் இரவிமால் இவர்முறையே இறைவ ராவார்.
                                                     118

     இவ் விடையாகிய தருமதேவதையான நான்கு யுகங்களாகிய உங்களை
நாற்கால், முக்கால், இருகால், ஒருகால் கொண்டு நடாத்த நீவிர் ஆள்க.
முதல் மூவீர்க்கும் மனக்கோட்டம் இல்லாத பிரமன் சூரியன், திருமால்
மூவரும் தலைவராகுக.

     தீமையே மிகப்படைத்த கலிஇவராற் காப்பரிய திறத்தால்
இந்த, நாமநெடுங் கலிநாளின் மன்பதைகள் புரப்பதற்கு நாமே
உள்ளேம், காமருசீர் உகங்காள்மற் றின்னும்ஒரு மொழிகேண்மின்
காதல் கூர்ந்தி, யாமினிது மகிழ்ந்துறையுங் காஞ்சியிடை நும்
அவத்தை எய்தா தாக.                                   119

     கொடுமையே மிகக்கொண்ட கலியுகத்தில் இத் தேவரால் காத்தல்
அரிதாகலின், அஞ்சத்தக்க இக்கலியில் பல்லுயிர்களையும் யாமே
காத்தற்குத் தலைவராவேம். விரும்பத்தக்க யுகங்களே! விரும்பி யாமுறையும்
காஞ்சிபுரத்தில் நும் அவத்தைகள் செயற்படாதாகுக.

     வெய்யகொடுங் கலித்தீமை சிறிதும்இவன் உறல்வேண்டா
இவ்வா றென்றும், மையகல நம்மாணை வழிஒழுகி உய்மின்என
வரங்கள் ஈந்து, கையொளிரும் மழுப்படையோன் அருள்செய்தான்
ஆதலின் இக் கலிநாள் முத்தி, எய்தியிடும் விழைவுடையோர்
திருக்காஞ்சி இடம்பிரியா திருத்தல் வேண்டும்.                120

     ‘மிகக் கொடிய கலியின் ஆணை சிறிதும் இத்தலத்திற் செல்லாது,
இங்ஙனம் விதித்தபடி பிழைபடாது நம் ஆணை வழியில் ஒழுகிப் பிழைத்துப்
போமின்’ என்று வரங்களை வழங்கினர் பரசுபாணியர். ஆகலின், கலியுகத்தில்
முத்தியை விரும்பினோர் திருக்காஞ்சியில் பிரிவின்றித் தங்குவாராக.