திருநகரப் படலம் 79


விருந்தின் சிறப்பும் விளைபயனும் திருக்குறளைப் பல்கால் படித்து ஊன்றி
உணர்தற் பாலன. அரியதிறல்; ஊடின மகளிரை நாயகரோடு சேர்த்து
வைப்பதில் சமர்த்தர் சேடர்‘ (பிரதாபருத்ரீயம்) அதனைமேற்கொளல் என்க.
‘‘விருந்தெதிர் கொள்ளவும்...............அரும் பெறற் புதல்வனை முயங்கக்
காணவும், ஆங்கவிந்தொழியுமென் புலவி” (கலித். 75.27-30)

மேல்நி லத்துவந் துலாவிடுங் கடவுள்மெல் லியலார்
தாழ்நி லத்துறுங் கூவல்கள் நோக்கிநந் தமைப்போல்
கீழ்நி லத்தவர் தாமும்இங் கெய்தினர் கெழீஇப்போம்
ஊழ்நி லைத்தபல் பிலங்கொலாம் உவையென வியப்பார்.    90

     மேல் நிலையில் வந்து திரிதரு தெய்வமகளிர் தாழ்ந்த நிலத்திலுள்ள
கிணறுகளில் நீரில் நிழலாகத் தம்வடிவையே நோக்கிப் பாதல உலகத்துப்
பெண்டிரும் நம்மைப் போல இவ்விடத்தெய்தி அளவளாவிப் போம்
முறையாக நிலை பெற்ற பல பிலவழி போலும் என மயங்கி அதிசயம்
அடைவர்.

கலி விருத்தம்

கால மன்றிக் கனிவுற மாதளைக்
கேல வான்புகை ஏற்றுதல் போல்மினார்
சால வெம்முலைச் சாந்தம் புலர்த்திடு
நீல தூமம் நிமிர்ந்தெழும் எங்கணும்.         91

     பழுத்தற்கு உரிய பருவம் அன்றி முன்னே பழுக்க வேண்டி
மாதளைக்கு ஏற்கப் பெரும்புகையை ஏற்றுதல் போல மின்னலை ஒத்த
மகளிர் பெரிதும் விரும்பப்படும் கொங்கைக்கண் பூசிய சந்தனத்தை
உலர்த்துகின்ற கரிய அகிற்புகை எவ்விடத்தும் பொங்கியெழும்.

     வாழை புகையால் பழுத்தல்; ‘‘இளமகளிர், செழுமென்
குழற்கூட்டகிற்புகையால் திரள்காய்க்கதலி பழுத்து நறை, பொங்கு மதுரை”
(மீனாட். பிள், 89) நீலம்-கரிய அகில்; ஆகுபெயர். கரியபுகையுமாம்.

கொன்னும் வார்குழற் கூட்டுங் குரூஉப்புகை
அந்ந லாரைப் பொதிவ தவர்தமைத்
தன்னின் நீங்கின மின்னெனத் தண்முகில்
உன்னி வந்து வளைந்திடல் ஒக்குமே.          92

     பெருமை பொருந்திய நீண்ட கூந்தற்கு ஏற்றிய கரிய நிறப்புகை
முன்னர்க்கூறிய மின்னலை ஒப்பவரை மறைப்பது, தண்ணிய மேகம் தன்னை
விட்டுப் பிரிந்து சென்ற மின்னென எண்ணி வந்து வளைத்துக் கோடலை
ஒக்கும்.

வார்கொள் கொங்கை மலர்க்கணை ஏறிடும்
ஏர்கொள் தொய்யிற் கருப்புவில் ஏந்துவார்
தார்ம லர்க்குழல் நாரியர் தாங்கள்தாம்
வீர வேள்படை என்றறி விப்பபோல்.           93