கச்சணிதற்குரிய கொங்கையினிடத்து மலரம்பு தொடுத்த கரும்பு வில்லினை அழகிய கோலமாக மலர் மாலையை அணிந்த கூந்தலையுடைய மகளிர் தாமே வீரமமைந்த சேனை என்றறிவித்தல் போலத் தாங்குவார். கூந்தற்குப் பெருமை யாவது ‘‘பூந்துகிலால் பொன்னால் பொதிகை மலைப்பிறந்த, சாந்தத்தால் பொன்மணியால் சாலப் புனைந்தாலும், ஏந்திழையார் தங்கள் எழிலெலாம் நெய்த்திருண்ட, கூந்தல்தான் இன்றேல் குறையுங்காண் என்பாரும்” எனும் செய்யுளை நோக்குக. தொய்யில்-முலையினும், தோளினும் எழுதுகோலம், திருநாவுக்கரசு நாயனார் இறைவன் உடைமை எனச் சூல, இடபக்குறி பெற்றமை காண்க. காமாரி யிடத்தன்றி வேறெவ்விடத்தும் தோல்வியுறாதவன் ஆகலின் ‘வீரவேள்’ என்றனர். நாறு தோட்டு நளினம் இரண்டினில் மாறி மாறிவீழ் வண்டின மாமெனக் கூறு மாதர் குழீஇருந் தாடுசீர் ஏறும் அம்மனைப் பாட்டிசை எங்ஙணும். 94 | மணங்கமழும் இதழினையுடைய இரண்டு தாமரை மலர்களில் மாறி மாறி வீழ்கின்ற வண்டின் குழாமெனக், கூறுதற்குரிய மகளிர் குழுமியிருந்து ஆடுகின்ற அம்மனைக்குத் தகச் சீரேறு பாட்டின் இசை எவ்விடத்தும் உள்ளன. அகங்கை இரண்டிற்குத் தாமரை மலரும், அம்மனைக்கு வண்டுகளும் ஒப்பன ஆகும். சீர்-தாள அறுதி; (மது-கா 160 உரை.) தங்கள் பண்மொழிக் கொக்குந் தகைமையை அங்கண் ஆய்பவர் ஏய்ப்ப அணிமலர்ச் செங்கை மெல்விரல் சேர்த்தித் திவவியாழ் எங்கும் மங்கையர் பாடுவர் எண்ணிலார். 95 | தங்களுடைய மொழியில் தோன்றுகின்ற இசைக்கு ஒக்குமோ எனும் அவ்வியல்பை அப்பொழுதே ஆராய்பவரைப்போல அழகிய மலரனைய சிவந்த கையின் மெல்லிய விரலால் வார்க்கட்டமைந்த யாழ் எழீஇ எண்ணிலராகிய மங்கையர் எவ்விடத்தும் பாடுவார். மேற்படி வேறு கொங்கையின் எதிருறக் கூசி னாலெனப் பொங்கொளித் தாளம்பின் னொலிப்பப் பூவைமார் மங்கலச் சதிநெறி வழாமல் ஆடரங் கெங்கணும் நூபுரத் திசையின் ஈட்டமே. 96 | |