கொங்கைகளின் எதிரில் (முன்) செல்ல நாணினாற்போல மிக்க ஒளியினையுடைய தாளம் நட்டுவர் கையில் இருந்து பின்னொலிப்ப, நாகணவாய்ப் பறவையை ஒப்போர் மங்கலமாகிய தாளவொற்றின் வழி பிறழாமல் ஆடுகின்ற நாடக சாலைகளில் எவ்விடத்தும் சிலம்பிசையின் திரண்ட ஒலியே உள்ளன. மைந்தர்பந் தெறிதலும் மாடப் பித்திகை சிந்துவ பன்மணி செழியன் செண்டெடுத் துந்தியன் றோச்சலும் உலப்பி லாநிதி தந்திடும் வடதிசைச் சாரற் குன்றுபோல். 97 | உக்கிர குமார பாண்டியர் முன்னாள் செண்டு கொண்டு வடதிசையிலுள்ள சாரலமைந்த மேரு மலையை வீசித் தாக்கிய அளவிலே வற்றாப் பெருஞ் செல்வத்தை அம்மேரு தந்தது போல, ஆடவர் பந்தினை வீசிய அளவிலே மாளிகைச் சுவரில் தாக்க அச்சுவர்கள் பல்வகை மணிகளைச் சிந்துவன. திருவிளையாடற்புராணம் மேருவைச் செண்டாலடித்த படலத்துள் இவ்வரலாறு காண்க. மணிப்பொலம் பூண்சிறார் விடுக்கும் வான்படந் தணித்தொறும் விடுந்தொறுந் தணிந்து நீள்வன கணிப்பரு நந்திநெட் டுயிர்ப்பின் காற்றிடைப் பணிப்பகை முன்னுழல் பரிசு காட்டுமே. 98 | மணிகள் பதித்துப் பொன்னால் இயற்றப்பெற்ற அணிகலன்களைத் தரித்த சிறுவர் வானில் பறக்க விடுக்கும் காற்றாடி, கயிற்றை இழுக்குந்தொறும் விடுந்தொறும் தாழ்ந்தும் நீண்டும் பறத்தல், அளத்தற்கரிய ஆற்றலையுடைய இடபதேவரது பெருமூச்சாகிய காற்றில் கருடன் முன்பு சுழன்று திரியும் நிலைமையைக் காட்டா நிற்கும். வான்-பெரிய எனலும் ஆம். தணித்தல்-தாழ்த்துதல். ‘தண்பதம்‘ (திருக். 548) என்புழிப்போல. பணி பாம்பு. பணிப்பகை-கருடன். திருமால் ஊர்தியாகிய கருடனை இடபதேவர் காற்றாடிபோல உள்ளுயிர்ப்பினால் மூக்குவரை இழுத்தும் வெளி உயிர்ப்பினால் வானிற் செலுத்தியும் செருக்கழித்த வரலாறு தழுவக்குழைந்த படலத்துட் காண்க. மாடமேல் சிறுமகார் விடுக்கும் வண்படம் பாடல்சால் இருசுடர் தம்மைப் பற்றுவான் நாடின திரிதரு நாக மென்னவும் ஆடுவ விசும்பிடை அமரர் நோக்கவே. 99 | மேல் மாடத்திலிருந்து சிறுவர் விடுக்கும் பெரிய காற்றாடிகள் புகழ் நிரம்பிய சந்திரசூரியர் தம்மைப் பற்றும் பொருட்டு நாடித்திரி தரு இராகு கேதுக்கள் எனக் கருதும்படி வானிடத்துத் தேவர்கள் வியந்து காண ஆடுவன. எனவும், இறந்தது தழீஇய எச்சவும்மை. |