அட்டிலில் குய்ப்புகை அணங்க னார்குழற் கிட்டிடும் அகிற்புகை மகத்தெ ழும்புகை முட்டிமேல் பரந்தெங்கும் மொய்த்த தோர்கிலார் வட்டவான் செழும்புகை வண்ண மென்பரே. 100 | சமையல் வீட்டில் எழும் தாளிதப் புகையும், மகளிர் குழற்கு ஊட்டும் அகிற்புகையும், வேள்வியிலெழும் புகையும் அளாவி மேலே பரவி எவ் விடத்தும் செறிந்ததை உணரார் வட்ட வடிவாயுள்ள ஆகாயம் முதிர்ந்த புகை நிறம் என்று கூறுவர். மூவகைப் புகையை அடுத்தவான் தன்னியல் திரிந்தது. வேள்விச் சாலை இந்திரன் ஊர்திஇங் கெய்தித் தன்முடிச் சுந்தரஞ் சிதைதரத் துதையச் சீறித்தன் மந்திரப் புகையினால் வலாரி ஊரெழில் சிந்திடச் செய்வசீர் வேள்விச் சாலையே. 101 | தேவேந்திரன் ஊர்தியாகிய மேகம் சிகரத்தின் மேல் தவழ்ந்து அழகுகெட நெருங்குதலால், சிறந்த வேள்விச்சாலைகள் சினந்து தன்னிடத்து மந்திர விதியாலமைந்த வேள்விப்புகையால் இந்திரனது நகரத்தின் அழகைச் சிதையச் செய்யாநின்றன. வலனை அழித்தமையாமல் இந்திரன் வலாரி ஆயினன். எழுசீரடி யாசிரிய விருத்தம் ஆகுதித் தழலின் அறுதொழி லாளர் அருமறை மனுஎடுத்தோதி, ஓகையிற் சொரிநெய் தெறித்தெழும் பிதிர்வும் ஒலிபடு புலிங்கமுங் கொண்டு; மேகமாய்ப் படர்ந்த தூமமே இடித்து மின்னிநீர் பொழிவன போலும், ஈகைசால் வேள்வி மறுத்துழி மாரி இன்மையே இதற்குறு சான்றால். 102 அவியிடும் வேள்வித் தீயினிடத்து அந்தணர் அரிய மறைப் பொருளாகிய மந்திரங்களை எடுத்துக் கூறி, உவகையொடும் மழை போலச் சொரிந்த நெய்யினின்றும் துள்ளி யெழும் சிறுதிவலைகளையும் ஒலி யெழுகின்ற தீப்பொறிகளையும் கொண்டு மேகமாய்ப் பரவிய புகையே இடியொலி காட்டி மின்னி மழை நீரைச் சொரிவன எனலாம். தேவர் கொடைக்கடனாய் அமைந்த வேள்வி செய்யாதொழிந்த வழி மழை இன்மையே இந்நிகழ்ச்சிக்குப் பொருந்திய சாட்சி. எடுத்தோதல்; அவ்வச் சடங்குகட்குரிய மந்திரங்களை ஓதுதல். இனி, எடுத்தல், படுத்தல் முதலிய ஓசையுடன் எனலுமாம். உடன் பாட்டானும், எதிர்மறையானும், அறிய வருதலின் உறுசான்று என்க. (இப்படலம் 78ஆம் செய்யுட் குறிப்பினும் காண்க) அறுதொழிலாவன; ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. ‘நெய்த் திவலை மழைத்திவலை’ என்றமையான் ‘நீர் நாண நெய்வழங்கியமையும்,’ ‘எண்நாணப் பல வேட்டமையும்’ பெறப்பட்டன. |