வளர்ந்த தருப்பை இலையின் நுதியெனக்கூரிய அறிவினையுடையவர்; தொன்று தொட்டு வருகின்ற குற்ற மற்ற செறிந்த கேள்விச் செல்வர்; மேற்கோள் முதலாகப் பேசப்பெறும் மூன்றானும் இளையருக்குத் தெளிவு படுத்தி உணரச்செய்யும் அளவை நெறியைக் கைக்கொள்வோர் நால்வகைப் புலமையார்; தங்களுள் உட்பகை புறப்பகை தவிர்ந்து, குழாம், குழாமாகி நூல்களை ஆராய்கின்ற கழகங்களும் பல உள்ளன. கூரிய பரந்த அறிவு: ‘‘அஃகி அகன்ற அறிவு” (திருக். 175) தொன்று தொட்டுடைய பளகு-அறியாமையாகிய குற்றம். மூன்று, மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு. நால்வகைக் கவிகள்; கவி, கமகன், வாதி, வாக்கி. கவி; ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நாற்கவி பாடுவோன். கமகன்; அரியபொருளைச் செம் பொருளாகப் பாடுவோன், வாதி; ஏதுவும், மேற்கோளும் எடுத்துக்காட்டுடன் பிறர் மதத்தை மறுத்துத் தன்மதத்தை நிறுத்துவோன், வாக்கி: உறுதிப்பொருள் நான்கனையும் கேட்கவும், விரும்பவும் இனியனவாக விரித்துக் கூறுவோன். சைவ மடம் காமனை முனிந்து நெடுஞ்சடை தரித்துக் கவின்றகல் லாடை மேற் புனைந்து, யாமெலாம் வழுத்தும் துறவியென் றிருந்தும் ஒருத்திதன் இளமுலைச் சுவடு, தோமுறக் கொண்டார் எனச்சிறையிடல் போல் சுடர்மனக் குகையுள் ஏகம்பத்(து), ‘‘ஓம்” மொழிப் பொருளை அடக்கி ஆனந்தம் உறுநர்வாழ் இடம்பல உளவால். 109 மன்மதனை எரித்து, நீண்ட சடைமுடிதாங்கி, அழகிய காவிக்கல் தோய்த்த உடை அழகுற அணிந்து, நாம் துதி செய்கின்ற துறவி என வீறு பெற இருந்தும் ஒருத்தியாகிய உமையம்மையினது இளமை அமைந்த கொங்கைத் தழும்பைத் தமது துறவற நிலைக்குக் குற்றமாகக் கொண்டாரென்று சிறைச்சாலையில் அடைந்தாற்போலத் தம்முடைய ஒளிகிளர் உள்ளத்துள் திருவேகம்பத் தெழுந்தருளியுள்ள ஓம் என்னும் மொழியின் பொருளாகிய இறைவரை அம்மந்திரத்தைத் தியானித்துப் பேரின்படையும் துறவோர் வாழும் இடங்கள் பல உள்ளன. திருக்கோயில் இருள்மலந் துமிக்குஞ் சிவாகம முறையின் ஈரிரு பாதமும் அனுட்டித், தருள்பெறும் ஆதி சைவர்களாதி அவாந்தர சைவரீ றானோர், மருவிவாழ் மாட மாளிகைப் பத்தி மருங்குடுத் துயர்வனப் பினதால், தெருள் தரும் அனாதி சைவர் வீற்றிருக்குந் திவளொளிப் புரிசைஏ கம்பம். 110 சிவஞானத்தை உயிர்களுக்கு அருளும் அனாதி சைவராகிய திருவேகம்பப் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில், ஆணவ மலவலியைக் கெடுக்கின்ற சிவாகம முறையிற் சரியை, கிரியை, யோகம், |