86காஞ்சிப் புராணம்


ஞானம் எனும் நாற்பாதங்களின் வழி ஒழுகித் திருவருளைப் பெற்ற ஆதி
சைவர் முதல் அவாந்தர சைவர் அடங்கச் சைவர் யாவரும் தத்தமக்குரிய
இடங்களிற் பொருந்தி வாழ்தற்கிடனாகிய மாடமாளிகை வரிசைகள் சுற்றிச்
சூழ்ந்துயர்ந்த அழகுடைய தாகும்.

     மலம் நித்தியப் பொருளாகலின் அதன் வலியை என்க. சிவாகமம்;
காமிக முதலிய இருபத்தெட்டும்.

திருமதில்

கலிவிருத்தம்

விண்ணழி வுறநிமிர் வீற டக்குவான்
அண்ணல்ஆ ணையின் இமில் ஊர்தி ஆண்டுறீஇ
எண்ணில உருவுகொண் டிருந்து நீரதே
பண்ணமை மதில்மிசை இடபப் பந்தியே.         111

     செயல் முற்றுப்பெற்ற மதில்மேலுள்ள இடப வரிசை, விண்ணுலகு
பெரிதும் அழியும்படி உயர்கின்ற மதிலின் செருக்கை அடக்கும் பொருட்டுச்
சிவபிரானுடைய கட்டளையால் திமிலுடைய இடபம் அங்கு வந்து
அளவில்லாத வடிவு கொண்டு வளராதபடி அழுத்துகின்ற இயல்பினை
ஒத்துளது.

திருக் கோபுரம்

ஒன்பது கோள்களும் உலாவி வைகுவான்
ஒன்பது மாடம்அங் கூழிற் செய்தன
ஒன்பது மணிகளின் இயன்ற ஒண்மைசால்
ஒன்பது நிலைதழீஇ ஓங்குங் கோபுரம்.          112

     நவக்கிரகங்களும் உலாவித் தங்குதற்கு ஒன்பது மாளிகைகள் அங்கு
அடுக்காகச் செய்தாற் போல ஒன்பது வகை மணிகள் கொண்டியற்றப்பட்ட
ஒளிமிகுந்த ஒன்பது நிலைகளைத் தழுவிக் கோபுரம் உயர்ந்து தோன்றும்.

கார்முகில் உடுக்கையாக் கதிரின் வானவன்
மார்பணி மணியதா வட்ட மாமதி
சீர்நுதற் பூதியாச் செல்வக் கோபுரம்
பார்புகழ் புருடனில் ஓங்கும் பான்மைத்தே.      113

     கரியமேகம் ஆடையாகவும், சூரியன் மார்பின் மணியாகவும் பூரணச்
சந்திரன் அழகிய நெற்றியிலணியப் பெற்ற விபூதி ஆகவும் கொண்டு
செல்வச் சிறப்பினையுடைய கோபுரம் உலகரால் புகழப்பெறும் ஓராடவர்
போல உயர்ந்து ஓங்கும் இயல்பினது. விபூதி-சிறந்த செல்வம்.

நச்சியே கம்பரைத் தொழுது நாள்தொறுங்
கச்சியில் வாழ்பவர் இறுதிக் காலையில்
அச்சிவ லோகத்தை அணுக வைத்ததோர்
பொச்சமில் ஏணியும் போலுங் கோபுரம்.         114