ஒடுங்கிய உலகை மீளத் தோற்றுவித்தற் பொருட்டு எமது முதல்வன் ஒற்றை மாமரத்தடியில் எழுந்தருளிக் குற்றமில்லாத சிறப்பினையுடைய இலளிதா தேவியைப் படைத்து, அப்பொழுதே அவள் விழிகளின் மும்மூர்த்திகளைத் தோன்றச் செய்து செயற்குரிய செய்கைகளைப் பிரித்துணர்த்தி அப்பிராட்டியும் கடவுளர் மூவரும் போற்றச் சிறந்து விளங்கா நின்றதும்; திருவிளை யாட்டான் மந்தரத் துமையாள் சிவபிரான் விழியிணை புதைப்பக், கருகிருட் பிழம்பின் உலகெலாம் மூழ்கிக் கடப்பருங் கவலையுற் றதுவும், வருவினை தணப்பப் பூசனை புரிவான் மழவிடைச் செய்கையும் புகன்று, பெருநகர்க் காஞ்சிக் கிறையவன் விடுப்பப் பிராட்டி அங் கெய்திய வாறும். 27 உமையம்மையார் மந்தரமலையிற் பொழுது போக்காகச் (திருவிளையாட்டாக) சிவபிரானாருடைய இரு விழிகளையும் மூட, அவ்வளவில் பேரிருட் குழம்பில் உலகங்கள் யாவும் மூழ்கிக் கரையேறலாகாக் கவலை எய்தியதும்; பல்லுயிரும் வருந்தியமையால் வந்த வினை தீரப் பூசனை செயும் பொருட்டு மழவிடைச் செய்கையும் கூறிக் கச்சிப் பெருநகர்க்கு இறையவன் விடுப்பப் பெருமாட்டி ஆங்கெய்தியதும்; மெய்த்தநல் லறங்கள் வளர்த்திடு மாறும் விண்டுவீச்சரம் அகத்தீசம், மத்தள மாத வீச்சரம் வணங்கிப் போந்துமாந் தருவடி முளைத்த, சத்தறி வின்பத் தனிமுதற் பொருளைத் தவத்தினாற் கண்டு கொண்டிறைஞ்சிப், புத்தமிழ் தனையாள் விதியுளி வழாமைப் பூசனை உஞற்றிய வாறும். 28 உமையம்மையார் நிலைத்த நல்லறங்கள் முப்பத்திரண்டும் வளர்த்திடும் இயல்பும்; விண்டு வீசம், அகத்தீசம், மத்தளமாதவேசம் வணங்கி வலம்போந்து மாவின் மூலத்தில் எழுந்தருளியுள்ள ‘சச்சிதானந்த’ த்தனி முதற் பொருளைத் தவத்தினால் தரிசித்து உளங்கொண்டிறைஞ்சிப் புத்தமிழ்தம் அனைய அம்மையார் விதிவழி அருச்சனை ஆற்றியதும், கருணைமீப் பொங்குந் திருவிளை யாட்டால் அழைத்துறுங் கம்பைநீர்ப் பெருக்கைக், குருமணிக் குழையாள் கண்டுளம் பதைத்துக் குழகனைத் தழுவிய வாறும், திருமுலைச் சுவடும் வால்வளைத் தழும்புஞ் சிவபிரான் பொலிவுறப் பூண்டு, மருமலர்க் குழலாள் காணமுன் நின்று வரம்பல அருளிய வாறும். 29 கருணை மேன்மேலெழும் திருவிளையாடலால் இறைவன் விடுத்த கம்பைநீர்ப் பெருக்கை நிறமுடைய மணிகள் பதித்த தோட்டினை அணிந்த அம்மை கண்டு உள்ளம் பதைத்துக் குழகனைத் தழுவியதும்; அம்மையாருடைய கொங்கைச் சுவடும், வெள்ளிய வளையல் வடுவும் சிவபெருமான் விளங்கப் பூண்டு ஏலவார் குழலி காண எழுந்தருளி வரம்பல அருளியதும்; |