102மேருமந்தர புராணம்  


 

வேறு.

215. எப்பிறப்பினும் பகையுனக் கிவனலன் முனியுமோ ருறவல்லன்
    எப்பிறப்பினும் பகையிவர்க் குண்டுமற் றுறவுனக் கிவனல்லன்
    இப்பிறப்பிலிப் பகையுற வுக்குநீ யிப்படி யெழுவாயேற்
    செப்பிறந்துழிப் பகையுற வுக்குநீ செய்வதென் னிருவாளா.

     (இ-ள்.)   எப்பிறப்பினும்   -   (முன் அனந்தமாகிய)    எந்த
ஜன்மங்களிலும்,  உனக்கு   -  உனக்கு, இவன் - இவ்வித்துத்தந்தன்,
பகையல்லன்   -   சத்துருவாகவே வரப்பட்டவனுமல்லன், முனியும் -
சஞ்சயந்தமுனியும்,   ஓர்   -   ஒரு ,  உறவல்லன் - மித்திரனாகவே
வரப்பட்டவனுமல்லன்,  எப்பிறப்பினும்  - (இதற்குமுன் அடுத்த) எந்த
ஜன்மங்களிலும்,   பகை   -    சத்துருவான    தன்மை, இவர்க்கு -
இவ்விருவர்களுக்கும்,  உண்டு  - சில சமயம் உளது, மற்று - பின்னர்,
இவன்  - இவ்வித்துத்தந்தன்,   உனக்கு - உனக்கு, உறவு அல்லன் -
உறவானவனுமல்லன்,  இப்பிறப்பில்  -   இந்த   ஒரு    ஜன்மத்தில்
உண்டாகிய, இப்பகையுறவுக்கு - இச்சத்துருமித்துருத் தன்மைக்கு, நீ -
நீ, இப்படி - இத்தன்மையாக,  எழுவாயேல்  - ராகத்வேஷங்களுடன்
கூடிச்    செல்வையானால்,    இறந்துழி   -    இதற்குமுன் சென்ற
ஜன்மங்களிலுண்டாகிய,  பகையுறவுக்கு - சத்துருமித்திரத் தன்மைக்கு,
நீ - நீ,  செய்வது - செய்வது, என் - என்னவிருக்கின்றது?, செப்பு -
(அதை ஆராய்ந்து தெளிந்து)  சொல்வாயாக,   (இவற்றை யோசித்து)
இருவாளா - பேசாதிருப்பாயாக, எ-று.                       (75)

வேறு.

216. ஐம்பரி வட்டணை யகத்தில் வாழுயிர்க்
    கென்பல சொல்லினின் றிவனை நீவிடு
    முன்பிவன் றனக்கிந்த முனிக்க ணாயதோ
    ரென்புறு வேரத்தா லிவர்க்கி தாயதே.

     (இ-ள்.) ஐம்பரி  வட்டணை   -   பஞ்சபரி  வர்த்தனையாகிற,
அகத்தில் - பெரிதாகிய ஸம்ஸாரத்தினிடத்தில், வாழ் - ஜீவிக்கப்பட்ட,
உயிர்க்கு  -   ஆத்மாக்களுக்கு,   பலசொல்லின்  -   அநேகமாகச்
சொல்லினும், என் - என்ன? (அதாவது : என்ன மிகையாகப்போகிறது;
எவ்வளவு   வேண்டுமானாலும்   சொல்லலாம்; ஆதலின்),  இன்று -
இப்பொழுது,  இவனை  -   இவ்வித்துத்தந்தனை,   நீவிடு - நீவிட்டு
விடக்கடவாயாக;  முன்பு - பூர்வத்தில், இவன் தனக்கு - இவ்வித்துத்
தந்தனுக்கு, இந்த முனிக்கண் - இச்சஞ்சயந்த முனியினிடத்தில், ஆயது
- உண்டாகியதான,   ஓர் - ஒரு,     என்புறும்  - எலும்புக்குள்ளும்
ஊடுருவிச் செல்லும்படியான,  வேரத்தால் - வைரபாவத்தால், இவர்க்கு
- இவ்விருவருக்கும்,    இதாயது    -   இத்தன்மையான   செய்கை
உண்டானது, எ-று.                                       (76)