20மேருமந்தர புராணம்  


 

மிருதுவான   நடையையுடைய   ஸ்திரீமார்களுக்கு,   அனங்கனாம் -
மன்மதனாகிய,   மன்னர்   மன்னவன்   -   இராஜாதி  இராஜனான,
வைசயந்தன் - வைசயந்தனென்னும் பெயருடையவனாகும், எ-று.  (41)

 42. ஆறு தீநய மகன்ற காட்சியான்
    ஆறு நன்னய மமர்ந்த மாட்சியா
    னாறு தொல்பகை யடர்த்த சூட்சியா
    னாறி லொன்றுகொண் டகன்ற வேட்கையான்.

     (இ-ள்)  ஆறு - ஆறுவிதமாகிய, தீநயம் - மித்தியா நயங்களை
(விட்டு),  அகன்ற - நீங்கிய,  காட்சியான் - தர்சனத்தை  யுடையவன்;
ஆறு - ஆறு  விதமாகிய,  நன்னயம்  -  நன்னயங்கள்,  அமர்ந்த -
பொருந்திய,   மாட்சியான்   -   பெருமையை  யுடையவன்;   ஆறு
தொல்பகை - பழமையான உட்பகையாறினையும், அடர்த்த - ஜெயித்த,
சூட்சியான்  -  உபாயத்தை  யுடையவன்;  ஆறிலொன்று கொண்டு -
குடிகளிடத்தில்   ஆறிலொரு   கடமை   வரி  வாங்கி,  அகன்ற -
நீங்கிய,    வேட்கையான்   -    ஆசையையுடையவன்  (அதாவது
பேராசை யில்லாதவன்), எ-று.

     நயங்களின் விவரங்கள் 6-வது சருக்கத்தில் காணப்படும்.   (42)

 43. கற்ப கமவன் கருதிற் றீதலால்
    சொற் பொருளறி சுருதி மாக்கடல்
    மற்பு யத்தினான் மால்வ ரைமலைக்
    கொற்ற வர்க்கெலாங் கூற்ற னொக்குமே.

     (இ-ள்)  அவன் - அம்மன்னன், கருதிற்று - யாசக ஜனங்களால்
வேண்டியவைகளை,  ஈதலால் - கொடுக்கிறதினால், கற்பகம் - கற்பக
மரத்திற்குச்  சமானமாவன்; சொல்  -  சாஸ்திரத்தில்  சொல்லப்பட்ட,
பொருள்  -  கொருள்களை,  அறி  - அறிகின்ற,  சுருதி  - சாஸ்திர
வுணர்ச்சியில்,  மாக்கடல் - பெரிதாகிய  சமுத்திரமாவன்; மல் - மல்ல
யுத்தஞ்செய்யும்,  புயத்தினால் - தோளினால்,   மால் - பெரியதாகிய,
வரை  -  பர்வதமாகும்,  மலை  -  மாறுபட்டுப்  போர்  செய்கின்ற,
கொற்றவர்க்கெலாம் - (சத்துரு)  இராஜாக்களுக்கெல்லாம்,  கூற்றன் -
எமராஜனையும், ஒக்கும் - நிகர்ப்பான், எ-று.                 (43)

 44. சூட்சி யாற்பகை சுருக்க லல்லது
    வாட்செய் போரிலன் வான்சொ லின்றிமண்
    ணாட்சி யாலிசை கேட்ட வசுணமாத்
    தாட்சி போல்வையந் தானி றைஞ்சுமே.