நோக்குமப் பொருளின் மெய்ம்மை நுகர்ந்தெழுந் தெளிவி வற்றை
யாக்குநல் லொழுக்கிற் சால வருந்தவன் விரும்பிச் சென்றான்.
(இ-ள்.) (மேலும்) யாக்கைக்கண் - சரீரத்தினிடத்தே, இச்சை -
ஒரு பொருளின்மேலுண்டாகிய விருப்பமானது, நிற்கும் - நிலைபெறும்,
(அது விஷயமாக) எழுத்தின்மேல் - அக்ஷரங்களின் மேலதாய்
(அதாவது அக்ஷரங்களினாலே), பழுத்த - கனிவு பெற்றுண்டாகிய,
சொல்லை - வசனத்தை, வாக்கு - வாயானது, நின்று - நிலைபெற்று,
உமிழும் - வெளிப்படுத்தும், (அதாவது : சொல்லும்), செவியும் -
காதும், அச்சொல்வசத்ததாம் - அந்த வசனத்தின் வசப்பட்டதாகும்,
(அதாவது : அதற்கிசையும்), உள்ளம் - மனதானது, அப்பொருளின் -
அந்தப் பொருள்களினது, மெய்ம்மை - யதாத்மியத்தை, நோக்கும் -
ஆராய்ந்து பார்க்கும் (அதாவது : அறியும்), தெளிவு - தரிசன
விசுத்தியானது, நுகர்ந்து - அதனை அநுபவித்து ( அதாவது :
சுவானுபூதி ஞானத்தையடைந்து), எழும் - ஓங்கி நிலைபெற்று நிற்கும்,
இவற்றை - இப்படி ஏற்படும் இவைகளையெல்லாம், ஆக்கும் -
செய்விக்கும், நல் - நன்மையாகிய, ஒழுக்கில் - ஸ்வாத்தியாயத்தில்
(அதாவது - சாஸ்திரம்படித்தலென்னும் அப்யந்தரதபஸில்), சால -
மிகவும், அருந்தவன் - அரிய தபத்தைச்செய்யும் இம்முனிவன்,
விரும்பி - இச்சித்து, சென்றான் - பிரவே சித்தான் (அதாவது :
அதனை அனுஷ்டித்தான்), எ-று. (76)
433. ஆர்த்தரவுத் திரத்த சிந்தை யறவெறிந் துயிரை மாற்றிற்
பேர்த்துமுத் திக்கண் வைக்குந் தருமசுக் கிலத்தி யான
மோர்த்துட னுள்ளம் வைத்தா னுதிர்ந்தன வினைகள் பின்னைப்
பார்த்திப குமரன் சிந்தைப் பரமமா முனிவ னானான்.
(இ-ள்.) ( அதன் மேல் ) ஆர்த்தரவுத்திரத்தசிந்தை -
ஆர்த்தத்தியானம் ரவுத்திரத்யான மென்னும்
அசுபத்தியானங்களையுடைய சிந்தையை, அறவெறிந்து - பற்றில்லாமல்
முழுவதும் நீக்கி, உயிரை - ஜீவனை (அதாவது : ஆத்மனை),மாற்றில்
- சம்ஸாரத்தினின்றும், பேர்த்து - நீக்கி, முத்திக்கண் -
மோக்ஷத்தினிடத்தில், வைக்கும் - சேர்க்கும்படியான, தரும
சுக்கிலத்தியானம் - தருமத்தியானம் சுக்கிலத்தியான மென்கின்ற
சுபத்தியானங்களை, ஓர்த்து - நன்றாக வறிந்து, உடன் - உடனே,
உள்ளம் - மனதில், வைத்தான் - ஸ்தாபித்தான், பின்னை - பிறகு,
வினைகள் - சில கர்மங்கள், உதிர்ந்தன - நிர்ஜரையை அடைந்தன,
(அவ்வாறாகவே), பார்த்திபகுமரன் - முன் அரசகுமாரனாயிருந்த
இச்சிம்மச்சந்திரன், (இப்போது), சிந்தை - தியானத்தினால், பரமம் -
மேலான, மா - பெருமை பொருந்திய, முனிவனானான் -
யதீஸ்வரனானான், எ-று.
ஆர்த்தத்தியானம் :- இஷ்டவியோகம்,
அனிஷ்டசம்யோகம்,
லாபஜம்,
ரோகஜம் என நான்கு வகைப்படும்.
|