(இ-ள்.) தாவிலா - தாழ்வில்லாத, தவத்தின் - தபத்தினுடைய,
பயனாகிய - பலனாகிய, தேவர் தந்தொகை - தேவஸமூஹங்கள்,
செய்வது - செய்கின்ற காரியத்தை, அறிந்து - தெரிந்துகொண்டு, பின்
- பிறகு, நாவினோசை - வாயினாற் பாடும் கீதங்களும்,
நரம்பினெழுகுரல் - நரம்புக்கருவிகளினால் (அதாவது : வீணை
முதலாகிய தத - விதத - கன - சுஷிரமென்னும் வாத்தியங்களினால்)
ஆகிய சங்கீத சப்தங்களும், தாவிலா - குறைவில்லாத, இலயம் -
தாளமும், பயில் - தங்கியிருக்கின்ற, சாலை - நர்த்தனசாலை
முதலானவைகளை, காண் - பார்ப்பாயாக, எ-று. (37)
491. படங்க டந்தணி தங்கி வல்குலார்
நுடங்கு நுண்ணிடை நோவ நுவலரும்
வடஞ்சு மந்த வனமுலை யின்பயன்
றுடங்கு பின்னென மற்றவர் சொல்லினார்.
(இ-ள்.) பின் -அதன்பிறகு, படங்கடந்து - ஸர்ப்பத்தினது பணா
முடியை (உருவத்தினாலே) ஜெயித்து, அணிதங்கிய -
அழகுபொருந்திய, அல்குலார் - அல்குலினையுடைய தேவிமார்களின்,
நுடங்கும் - அசைகின்ற, நுண் - மெல்லிதாகிய, இடை - இடையானது,
நோவ - நோகும்படியாக, நுவலரும் - சொல்லுதற்கரிய குணமான,
வடம் - முத்துமாலைகள் முதலியவைகளை, சுமந்த - அணிந்த, வனம்
- அழகிய, முலையின் - ஸ்தனங்களிலுண்டாகும், பயன் -
காமசௌக்கிய பலனை, துடங்கு - அனுபவிக்கத் தொடங்குவாயாக,
என - என்று, அவர் -அத்தேவர்கள், சொல்லினார் - சொன்னார்கள்,
எ-று.
மற்று - அசை. (38)
492. நீதி யைக்கட வார்பெரி யோர்கடா
மாத லாலம ரன்னவை செய்தபின்
காதி யைக்கடி யுந்திரு மாலடி
போது கொண்டு புகழ்ந்து பணிந்தனன்.
(இ-ள்.) பெரியோர்கள் தாம் - குணவந்தர்கள், நீதியை - நீதி
நெறியை, கடவார் - தவறார்கள், ஆதலால் - ஆகையால், அமரன் -
ஸ்ரீதரதேவன், (அவர்கள் சொற்படி), அவை - அக்காரியங்களை,
செய்தபின் - செய்த பிறகு, காதியைக் கடியும் - காதிகர்மங்களைப்
போக்கின, திருமால் - 1ஜினேஸ்வரனுடைய,
அடி - பாதங்களை,
போதுகொண்டு - புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சித்து, புகழ்ந்து -
ஸ்துதித்து, பணிந்தனன் - வணங்கினான், எ-று. (39)
_____________________________________________________
1இங்கு
ஜினேஸ்வரன் என்றது அத்தேவனது
விமானத்திலிருக்கப்பட்ட அக்கிருத்திமசைத்யாலயப் பிரதிமைகளை. |