(இ-ள்.) ஒட்டகம் - ஒட்டையும், கழுதை - கழுதையும், நாய் -
நாயும், பாம்பு - ஸர்ப்பமும், வாசி - குதிரையுமாகிய இவைகளினுடைய,
ஊன் - மாமிசங்களை, இட்டதோர் - போட்டு நாற்றமெடுத்ததாகிய
ஒரு, குழியின் - குழியைக் காட்டிலும், மிக்கெழுந்து -
அதிகமாகக்கிளம்பி, நாறிடும் - நாறும்படியான, மட்டிடை - நரகத்தில்,
வீழ்ந்து - விழுந்து, அதிலமைந்த - அதிலிருக்கும் ஆவாஸத்தில்
பொருந்திய, யாக்கையான் - சரீரத்தையுடையவனாகி, சுட்டதோர்
பனைத்துணிப்போல - கொளுத்தப்பட்ட ஒரு பனங்கட்டையைப்போல,
(அதிகக் கறுப்பு நிறத்தையுடைத்தாய்), தூங்கினான் - தொங்கினான்,
எ-று. (61)
515. முடையுடம் பதுவொரு மூழ்த்த மேகலும்
படைமிடை பூமிமேற் பதித்த போழ்தினே
தடியொடு தண்டுவா ளேந்திச் சூழ்ந்திடாக்
கடையற வதுக்கினார் காள மேனியார்.
(இ-ள்.) முடை - துர்க்கந்தத்தையுடைய, உடம்பு -
(ஆவாஸத்தில் பொருந்திய) அந்நரக சரீரமானது, ஒரு மூழ்த்தமேகலும்
- ஒரு அந்தர் முகூர்த்தம் சென்ற காலத்தில், படை -
ஆயுதங்களினால், மிடை - நெருங்கிய, பூமிமேல் - நரக பூமியில்,
பதித்தபோழ்தின் - அழுத்திய காலத்தில், காளமேனியார் - கறுப்புச்
சரீரத்தையுடைய புராதன நாரகர்கள், தடியொடு - கோல்களுடனே,
தண்டு - தண்டாயுதங்களையும், வாள் - வாள் முதலான
வாயுதங்களையும், ஏந்தி - கையில் தரித்து, சூழ்ந்திடா - இந்த நூதன
நாரகனைச் சூழ்ந்துகொண்டு, கடையற - இவனது சரீரம் அடியற்று
நீங்கும்படியாக, அதுக்கினார் - அடித்தார்கள், எ-று. (62)
516. திரித்தனர் செக்குர லுட்பெ யர்ச்சியி
லுரித்தனர் கிழிகளை யொப்பச் சுற்றிடா
வெரித்தனர் நிறைத்தமுள் ளிலவ மேற்றிநின்
றுரைத்தன ரெதிரெதிர் வளைந்த முள்ளின்மேல்.
(இ-ள்.) செக்குரலுள் - உரல்போன்று கல்லாலாகிய
செக்கினுளிட்டு, பெயர்ச்சியில் - ஆட்டுதலால், திரித்தனர் - (சரீரம்
நசுங்கும்படியாக) சுற்றி அரைத்தார்கள், கிழிகளையொப்ப -
துணித்துண்டுகளுக்குச் சமானமாக, உரித்தனர் - (சரீர முழுதிலுமுள்ள
மேற் சதையை) கிழித்தார்கள், சுற்றிடா - எப்பக்கத்திலும் சுற்றி,
எரித்தனர் -அக்கினியை உண்டுபண்ணிக் கொளுத்தினார்கள், நிறைத்த
- நெருக்கிவைத்த, முள்ளிலவமேற்றி நின்று - முள்ளிலவமரத்திலே
ஏற்றி நின்று, எதிர் எதிர் - ஒன்றுக்கொன்று எதிரெதிராக, வளைந்த -
வளைந்து கூர்மையாகிய, முள்ளின் மேல் - முள்ளுகளின் மேலே,
உரைத்தனர் - தேய்த்தார்கள், எ-று. (63) |