522. நெருப்பினை யுமிழ்ந்திடும் நிழல்கள் புக்கிடில்
விருப்புறு மவைவிப ரீத மாய்வருஞ்
செருச்செயா தாரிலைத் திரியுந் தீவளி
யுரைப்பதென் னவனினி நரகத் துற்றதே.
(இ-ள்.) (இன்னும் அவன்) நரகத்து - நரகத்திலே, நிழல்கள்
புக்கிடில் - நிழல் வேண்டுமென இச்சித்துத் தோப்புகளின்
நிழல்களிலடைந்தால், (அத்தோப்புகள்), நெருப்பினை - அக்கினியை,
உமிழ்ந்திடும் - மேலே சொரியும், (அதுவன்றியும்), விருப்புறுமவை -
அவனால் இச்சிக்கப்பட்டவைகளெல்லாம், விபரீதமாய் - நினைத்த
அவற்றிற்கு எதிரிடையாக மாறுபாடாய், வரும் - உண்டாகும்,
செருச்செயாதார் - அவனோடு சண்டை செய்யாதவர்கள், இல்லை -
அந்நரகத்திலில்லை, தீவளி - அக்கினிக்காற்று, திரியும் - அவன்
சஞ்சரிக்கும் எவ்விடங்களிலும் மிகுதியாய் உலாவும், இனி -
இன்னமும், அவன் - அந்நாரகன், உற்றது - அடைந்த துயரத்தில்,
உரைப்பது என் - சொல்லக்கூடியது என்ன விருக்கின்றது, (எல்லாத்
துன்பத்தையுமே அடைந்தான்), எ-று. (69)
வேறு.
523. நாகத்தைப் போலு நாகம் நாகத்தால் நாக மெய்த
நாகத்தை நாகந் துய்த்து நாகந்தா னரக மெய்த
மேகத்தி னோடுந் திங்கள் வீழ்ந்துடன் கிடந்த தென்ன
நாகத்தின் கொம்பு முத்தும் நரியெனுங் குறவன் கொண்டான்.
(இ-ள்.) (மேற்கூறியபடி) நாகத்தைப்போலும் - பர்வதத்துக்குச்
சமானமாகிய, நாகம் - அசனிகோடமென்னும் யானையானது,
நாகத்தால் - குக்குடஸர்ப்பத்தினால், (கடிக்க இறந்து), நாகமெய்த -
தேவலோகமடைய, நாகத்தை - அந்த ஸர்ப்பத்தை, நாகம் -
குரங்கானது, துய்த்து - கடித்துத் தின்றுவிட, நாகந்தான் - அக்குக்குட
ஸர்ப்பமானது, நரகமெய்த - மூன்றா நரகத்தையடைய,
மேகத்தினோடும் - மேகக் கூட்டத்தோடும், திங்கள் - சந்திரனும்,
வீழ்ந்து - பூமியில் விழுந்து, உடன் - ஒரு தன்மையாக, கிடந்ததென்ன
- கிடந்தது போல, (கரிய மேனியும் வெள்ளிய தந்தங்களும்
விளங்கக்கிடந்த) நாகத்தின் - அந்த யானையினுடைய, கொம்பும் -
கொம்பையும், முத்தும் - முத்துக்களையும், நரியெனும் -
நரியனென்னும் பெயரையுடைய, குறவன் - ஒரு வேடன், கொண்டான்
- கைப்பற்றிக் கொண்டான், எ-று. (70)
524. தந்தமு முத்துங் கொண்டு தனமித்தன் றன்னைக் கண்டு
வெந்திறல் வேட னீந்து வேண்டுவ கொண்டு போனான் |