(இ-ள்.) (இன்னும்) அம் - அழகிய,சொலார் - சொல்லையுடைய
ஸ்த்ரீமார்கள், இன்மையார் - இல்லாதவர்களாகிய, அகநல்லிந்திரர் -
நன்மையாகிய இந்த அஹமிந்திர தேவர்கள், அஞ்சிறப்பு - (தீர்த்தங்கா
பரம தேவர்களுக்கு) அழகிய பஞ்சகல்யாண பூஜையை, அயர்வுழி -
மற்ற கல்பவாஸிதேவர்கள் செய்கின்றகாலத்தில், அறிவன் - கேவல
ஞானத்தையுடைய அரஹந்தனது, ஆணையால் - ஆக்கினையால்,
அஞ்சிரண்டடி - ஏழடி, நடந்து - சென்று, இறைஞ்சலல்லது -
வணங்குவதேயல்லாமல், அஞ்சிவந்து - பயந்துவந்து, ஒருவர் தம் -
ஒருவருடைய, ஆணையில் - ஆக்கினையில், செலார் -
செல்லமாட்டார்கள், எ-று. (102)
556. இன்பமே யிடையறா தெழுத லல்லது
துன்பமுங் கவலையுந் தோகை யன்னவர்க்
கன்புநண் பும்மிலா வகமிந் திரத்தவன்
முன்புபின் பழிந்தெய்தா மூர்த்தி யாயினான்.
(இ-ள்.) இன்பமே - ஸௌக்கியமே, இடையறாது -
இடைவிடாமல் எப்போதும், எழுதலல்லது - உண்டாவதேயல்லது,
துன்பமும் - துக்கமும், கவலையும் - மனவருத்தமும்,
தோகையன்னவர்க்கு - ஆண்மயில்போற் சரீரச்சாயலையுடைய
ஸ்த்ரீமார்களிடத்து, அன்பு - ஆசையும், நண்பும் - அவர்கள்
ஸ்நேகமும், இலா - இல்லாத, அகமிந்திரத்து - இவ்வஹமிந்திரத்திலே,
அவன் - ப்ரீதிங்கரனென்னும் பெயருடைய அவ்வஹமிந்திரன், முன்பு
பின்பழிந் தெய்தா - முன்னுக்குப்பின் கெடுதியடையாத (அதாவது :
தோன்றிய சரீரசுகாதிகள் ஆயுஷ்ய மளவும் விகல்பமடையாத),
மூர்த்தியாயினான் - தேவசரீரத்தை யுடையவனானான்,
எ-று. (103)
557. அருந்தவம் பொருந்திய சீல மாதியாற்
றிருந்திய நால்வருந் தேவ ராயினார்
பெருந்துயர் விலங்கிற்றீ வினையில் வீழ்ந்துபின்
பொருந்தினா னிரயத்துப் பூதி போகியே.
(இ-ள்.) (இவ்வாறு) அரும் - தரித்தற்கரிதாகிய, தவம் -
தபத்தினாலும், பொருந்திய - சேர்ந்திராநின்ற, சீலமாதியால் -
சீலாச்சார முதலியவற்றாலும், திருந்திய - திருத்தமாகிய, நால்வரும் -
(ஸிம்மசேன வரசனும், தேவியும், குமாரர்களிருவரும் ஆகிய) நான்கு
பேர்களும், தேவராயினார் - தேவர்களாயினார்கள், பூதி - ஸ்ரீபூதி
என்னும் மந்திரியானவன், பெருந்துயர் - பெரியவாகிய
துக்கங்களையுடைய, விலங்கில் - விலங்குஜாதியில், தீவினையில் -
பாபவினையால், வீழ்ந்து - மன்று தடவை பிறந்து, (அதாவது :
அகந்தன ஸர்ப்பம், சமரீமிருகம், கோழிப்பாம்பு என்னும் மூன்றும்
ஆகி), பின் - பிறகு, நிரயத்து - மூன்றாநரகத்தில், போகி - சென்று,
பொருந்தினான் - அடைந்து நாரகனானான், எ-று. (104) |