வைசயந்தன் சமவசரணம் சேர்தல்.
வேறு.
56. மதிதலைப் பட்ட போழ்தின் மகிழ்ந்துவை சயந்த னென்றே
நிதியறை திறந்து வீசி நீதியாற் செல்லு நாளுட்
டுதைமல ரசோக மென்னும் வனத்திடைச் சுயம்பு நாமத்
ததிசய மடையக் கண்டா ரரசனுக் கறிவித் திட்டார்.
(இ-ள்) மதி
- சந்திரன், தலைப்பட்ட
போழ்தின் -
சம்பூர்ணத்தை யடைந்த காலத்தில் (சமுத்திரம்
மகிழ்வதுபோல),
மகிழ்ந்து - (அரசன்) சந்தோஷமடைந்து,
(அப்புதல்வனுக்கு)
வைசயந்தனென்று - வைசயந்தனென்று பெயரிட்டு,
நிதியறை -
பாண்டாகாரத்தை, திறந்து -
திறந்துவிட்டு, வீசி - யாசக
ஜனங்களுக்குப் பொன்னை யெடுத்துச் சிதறித் தானங்கொடுத்து,
நீதியால் - கிரமத்தால், செல்லுநாளுள் - நடக்கின்ற காலத்தில், துதை
- நெருங்கிய, மலர் - பூக்களையுடைய,
அசோகமென்னும் -
அசோகமென்கிற, வனத்திடை - உத்தியானத்தில், சுயம்பு நாமத்து -
ஸ்வயம்பு நாமதீர்த்தங்கரருடைய, அதிசயம் - 1சமவசரணம்,
அடைய
- வந்துசேர, கண்டார் - பார்த்த வனபாலகர்கள்,
அரசனுக்கு -
ராஜாவுக்கு, அறிவித்திட்டார் - அவ்விசேஷத்தைத் தெரிவித்தார்கள்,
எ-று. (56)
57. விழுநிதி யெளிதிற் பெற்ற வறியவன் போல வேந்த
னெழுதரு விசோதி தன்னா லெழுந்துசென் றிறைஞ்சி வாழ்த்தி
முழுதுட னவர்கட் கீந்து முனிவர்தங் கோன் சிறப்புக்
கெழுகென வீதிதோறு மியம்பின முரச நின்றே.
(இ-ள்) விழுநிதி
- பெரிதாகிய நிதியை, எளிதில் - சுலபமாக,
பெற்ற - அடைந்த, வறியவன்போல - ஏழையைப்போல, வேந்தன் -
வைசயந்த மஹாராஜன், எழுதரு - உண்டாகிய, விசோதி தன்னால் -
விசுத்த பரிணாமத்தால், எழுந்து - ஆசனத்தைவிட்டு எழுந்திருந்து,
சென்று - 2ஏழடி நடந்து,
இறைஞ்சி - வணங்கி, வாழ்த்தி -
ஸ்தோத்திரம்பண்ணி, உடன் - உடனே, முழுதும் - (தானணிந்திருந்த
ஆபரணம்) முழுமையும், அவர்கட்கு - அவ்வன பாலகர்களுக்கு.
ஈந்து - கொடுத்து, முனிவர்தங்கோன் - முனீஸ்வரர்களுக்கெல்லாம்
எஜமானாகிய ஸர்வக்கியனது, சிறப்புக்கு - பூஜைக்கு, எழுகென -
எல்லோரும் செல்லக்கடவீராக என்று கட்டளையிட, வீதிதோறும் -
வீதிகள்தோறும், முரசம் - பேரிகைகள், நின்று -
நிலைபெற்று,
இயம்பின - அவ்விஷயத்தைக்கூறி முழங்கின, எ-று. (57)
___________________________________________
1சமவசரணம் - தேவர்களால் நிர்மிக்கப்பட்ட
கோயில்.
2ஏழடி நடத்தல் - சப்த பரிவர்த்தனையைத் தாண்டுதலுக்
கறிகுறியாம்.
|