மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 273


 

 591. மழையுண் மின்னென மாளிகை யூடுலா
     முழைய னார்புரு வத்துரு வச்சிலை
     குழைய வாங்கி விடுங்கணம் புள்புக
     வழலுங் கவ்வை யமர்ந்ததங் கோரொர்பால்.

     (இ-ள்.)   (மேலும்)   அங்கு  - அந்நகரத்தில்,  ஓரொர்பால் -
ஒவ்வோரிடங்களிலும்,  மழையுள் - மேகத்துள் பொருந்திய, மின்னென
-   மின்னற்        கொடிபோல,       மாளிகை      யூடுலாம் -
மாளிகைகளிலுலாவுகின்ற,   உழையனார்  -  பெட்டைமானைப் போல
மருண்ட    பார்வையுடைய   மாதர்கள்,   புருவம்  -  தங்களுடைய
புருவங்களாகிற,   உருவம்  -  ரூபம்  பொருந்திய, சிலை - வில்லை,
குழைய - வளையும்படியாக, வாங்கி நெற்றியிலேறிட வளைத்து, விடும்
- அந்த  வில்லினின்றும்  விடப்பட்ட,  கண் -  தங்கள் கண்களாகிற,
அம்பு  -  அம்புகளானவை,  உள்புக  -  மைந்தர்களுடைய மனதில்
தைத்துக்கொள்ள,   அழலும்    -   அதனால்  அவர்கள் வெதும்பி
வருத்தமடைகின்ற,     கவ்வை    -   துன்பமானது,  அமர்ந்தது -
பொருந்தியதாகும்,

     புருவத்து என்பதில் அத்து - சாரியை.                  (31)

 592. மதிய டைந்த நெடுங்கொடி மாடவூர்க்
     கதிபன் விஞ்சையர் கோனதி வேகனாம்
     நிதியி ரண்டென நீடிய தோளினான்
     விதியின் விஞ்சை கடந்த நெடுந்தகை.

     (இ-ள்.)  மதியடைந்த  -  சந்திரனிடத்தில் சேர்ந்த, (அதாவது :
சந்திர   மண்டலம்வரை   அளாவிய),   நெடும்  -  நீண்ட, கொடி -
த்வஜங்கள்பொருந்திய,   மாடம்  - உப்பரிகைகளையுடைய, ஊர்க்கு -
அத்தரணீதிலக     புரத்துக்கு,    அதிபன்   -    அதிபதியானவன்,
விஞ்சையர்கோன் - வித்தியாதரர்களுக்  கெல்லாம் ராஜாவாகியவனும்,
நிதியிரண்டென          -         சங்கநிதி       பத்மநிதிபோல
(தியாகங்கொடுக்கும்படியான),   நீடிய - பெரியனவாகிய,  தோளினான்
- கைகளை  யுடையவனும்,   விதியின் - விதிக்  கிரமத்தால், விஞ்சை
- வித்தைகளை  யெல்லாம்,   கடந்த  - கரைகண்ட,   நெடுந்தகை -
பெரிதாகிய   குணத்தை   யுடையவனும்,  (ஆகிய)  அதிவேகனாம் -
அதிவேகனென்னும் பெயரினையுடையவனாவான், எ-று.         (32)

வேறு.

 593. விலக்கிலா விழுநிதி வென்றி யாயுவா
     மிலக்கண மியாவையு மிருந்த கொம்பனாள்
     சுலக்கணை யாம்பெயர் துனார்க டோள்வலி
     விலக்கிய புயத்ததி வேகன் றேவியே.