வில்லாத, (அதாவது :- ஸஜ்ஞி பஞ்சேந்திரியமாகிய), விலங்கிலும் -
விலங்கு ஜாதிகளிலும் (ஒன்று சரீரம் விடுமேயானால்), ஓர் நான்கு -
முன்சொன்ன நாலு கதிகளிலும், எய்தும் - தக்கபடி அடையும், (தேவ
ஜீவன்கள்)வானின் வந்து - தேவலோகத்தினின்றும் சரீரம் விட்டுவந்து,
விலங்கும் - விலங்கு ஜாதியும், மனிதன் - மனிதனும், ஆம் - ஆகிய
இவ்விரு கதிகளில் தக்க யோக்கியத்தின்படி பிறக்கும், நாரகன் -
நரகஜீவன்கள், ஈனமில்லவை - குறைவில்லாதனவாகிய கதிகளை,
(அதாவது : முன் தேவகதி எப்படிச் சொல்லப்பட்டதோ அப்படியே
குறைவில்லாமல்), எய்திடும் - தக்கபடி அடையும், எ-று.
சதுர்கதி சீவன்கள் வேறு கதிக்குச் செல்லும் விவரம்
சாமான்யமாகச் சொல்லப்பட்டது. (72)
வேறு.
73. நாலறி யீறு நான்கும் நரகருந் தேவர் தாமும்
மாலுறு போக பூமி மக்களும் விலங்கு மாகார்
மேலுற வான தாதி தேவர்கள் விலங்கின் வாரார்
சாலவீ சானன் மேலா ரீரைவர் சன்னி யாவார்.
(இ-ள்) நாலறியீறு நான்கும் - ஏக, த்வீ, த்ரீ, சதுரிந்திரிய
சீவன்கள் நான்கும், நரகரும் - நாரகர்களும், தேவர் தாமும் -
தேவர்களும், மாலுறு - ஆசை பொருந்திய, போகபூமி -
போகபூமிகளில், மக்களும் - மனுஷ்யர்களாகவும், விலங்கும் -
விலங்குகளாகவும், ஆகார் - பிறக்கமாட்டார்கள், (பின்னையாவர்
பிறப்பரெனில், கரும பூமியிலுள்ள மனுஷ்ய சீவன்களும்,
விலங்குகளும் உத்தம, மத்திம, ஜகன்னிய பாத்திரதானானுமோத
புண்ணியத்தினால், போய்ப் பிறப்பனவாம்), மேலுற - மேன்மை
பொருந்த, ஆனதாதி தேவர் - ஆனத, பிராணத, ஆரண,
அச்சுதமாகிய நாலு கல்பத்திலும், அகமிந்திரத்திலுமாகிய தேவர்கள்,
விலங்கின் - விலங்கு கதியில், வாரார் - பிறக்கமாட்டார்கள்
(மனுஷ்யராகவே பிறப்பரென்றபடி), சால - மிகவும், ஈசானமேலார் -
சௌதர்ம ஈசான கல்பத்துக்கு மேலாக உள்ள, ஈரைவர் - சனத்குமாரர்
முதல் சஹஸ்ராரர் வரையிலும் உள்ள பத்துத் தரத்தார்களும்,
சன்னியாவர் - ஸஜ்ஞி சீவன்களாகவே பிறப்பார்கள்; (அஸஜ்ஞி
சீவன்களாகப் பிறக்கமாட்டார்கள் என்றபடி), எ-று. (73)
74. நீர்மர நிலங்க ளாவர் நின்றநால் வகைய தேவர்
நீர்மர நிலங்கள் செல்லும் விலங்கொடு மக்க டம்மிற்
சீர்மையில் விலங்கு மக்கட் டீயொடு வளியு மாவர்
நீர்மையின் னெருப்பிற் காற்றி னின்றன விலங்கிற் றோன்றும். |