(இ-ள்.) நின்ற - கீழிலிராநின்ற, நால்வகைய தேவர் -
நாலுவிதமாகிய (அதாவது : பவண, வியந்தர, ஜோதிஷ்க, ஸௌதர்ம
ஈசான்யராகிய நாலுவகை) தேவர்களும், நீர் - அப்புகாயிகங்களாகவும்,
மரம் - வநஸ்பதிகாய சீவன்களாகவும், நிலங்கள் - பிருத்திவிகாய
சீவன்களாகவும், ஆவர் - பிறப்பார்கள் (என்றதனால், தேயு, வாதகாய
சீவன்களாகார் என்பது பெறப்படும்), நீர் - அப்புகாயிக சீவன்களும்,
மரம் - வநஸ்பதி சீவன்களும், நிலங்கள் - பிருத்திவி சீவன்களும்,
விலங்கொடு - விலங்கு ஜாதியோடு, மக்கடம்மில் - மனுஷ்ய
ஜன்மத்திலும், செல்லும் - போய்ப் பிறக்கும், சீர்மையில் -
சிறப்பில்லாத, விலங்கும் - விலங்குகளும், மக்கள் மனுஷ்யர்களும்
(என்றதனால் தெளிவில்லாத மோஹனீய உத்க்ருஷ்ட ஸ்திதிபந்தமுள்ள சீவன்கள் என்பது பெறப்படும்), தீயோடு - தேஜஸ்காயத்தோடு,
வளியுமாவர் - வாதகாய சீவன்களாகவும் பிறப்பார்கள், நீர்மையில் -
குணமில்லாத (மிகவுந் தாழ்ந்த), நெருப்பின் - நெருப்பிலும், காற்றின் -
காற்றிலும், நின்றன - நிலைபெற்றனவாகிய தேஜஸ்காய சீவன்களும்
வாதகாய சீவன்களும், விலங்கிற்றோன்றும் - விலங்கு ஜாதியிலேயே
பிறக்கும் (மனுஷ்யராகப் பிறவார் என்றபடி), எ-று. (74)
75. அருகன துருவ மில்லா ரகமிந்தி ரத்துட் டோன்றா
ரருமையிற் சாச ராந்த மடைவரா சீவ ரன்றிப்
பிரமனை யந்த மாகப் பரிப்பிரா சகருஞ் செல்வர்
மருவுவர் சோதி டாந்தம் மற்றத்தா பதர்க டாமே.
(இ-ள்.) அருகனது - அருகத்பரமேஸ்வரனுடைய, உருவமில்லார்
- ரூபமாகிய நிர்க்கந்ததபம் பண்ணாதவர்கள், அகமிந்திரத்துள் -
அகமிந்திரலோகமாகிய நவக்கிரைவேயகம், நவானுதிசை,
பஞ்சானுத்தரங்களில், தோன்றார் - பிறக்கமாட்டார்கள், ஆசீவர் -
சுவேதாம்பரிகள், அருமையில் - மஹா அருமையினால், (மிகத்
தபசுபண்ணி சாசராந்தம் ஸஹஸ்ராரகல்பம் வரையிலும்), அடைவர் -
செல்லுவார்கள், பரிப்பிராசகரும் - பரிவ்ராஜக சன்னியாசிகள்,
பிரமனையந்தமாக - பிரம்ம கல்பம் வரையிலும், செல்வர் -
செல்லுவார்கள், மற்றத்தாபதர்கள் - (பஞ்சாக்னி மத்தியில்
தபம்பண்ணப்பட்டவர்கள் முதலாகிய) மற்ற பாஷண்டிகள்,
சோதிடாந்தம் - பவண, வியந்தர, ஜோதிஷ்கரென்னும்
கீழ்முத்தேவர்களாகவே, மருவுவர் - அடைவார்கள், எ-று. (75)
வேறு.
76. நற்காட்சி யுடைவிலங்கும் மானிடரும் வதஞ்செறிந்துங்
கற்பாதி முதலாகக் கற்பாந்த முறச்செல்வர்
நற்பால வதஞ்செறிந்த நார்விலங்கு பவணாதி
கற்பாந்தஞ் சாசராந் தங்காண்பர் முறையுளியே. |