இங்ஙனம் கூறியதனால்
பிள்ளை பிறந்த காலத்தில் ஏழைகளது
வறுமை நீங்கும்படி விசேஷமாகப்
பொருள்கள் தானம்
செய்யப்பட்டன என்பது பெறப்படும். (8)
757. செக்கர்மலி வானினிடைத் திங்களென
வந்தாங்
கக்குலம் விளங்கவண்ண றோன்றிய
கணத்தே
விக்கிரம சாலிவினை யெட்டும்வெலு
மென்றே
தக்கபெய ருஞ்சக்க ராயுதனென்
றிட்டார்.
(இ-ள்.) செக்கர்
- சிவப்பு வர்ணமானது, மலி - நிறைந்த,
வானினிடை - அந்திச் செவ்வானத்தில், (தோன்றிய),
திங்களென -
மூன்றாம் பிறைச்சந்திரன் போல,
அண்ணல் - பெருமையிற்
சிறந்தவனாகிய வக்குமாரன், ஆங்கு - அவ்விடத்தில், அக்குலம் -
அந்த ராஜகுலமானது, விளங்க - பிரகாசிக்கும்படியாக,
வந்து
தோன்றிய கணத்தே - வந்து பிறந்த காலத்திலே, விக்கிரமசாலி -
பராக்கிரம சாலியாகிய இப்புத்திரன்,
வினையெட்டும் - அஷ்ட
கருமங்களையும், வெலுமென்று - கெடுப்பான் என்று, (அவனுக்கு),
தக்க - தகுதியாகிய, பெயரும் - நாமமும், சக்கராயுத னென்றிட்டார் -
சக்கராயுதனென்று சொல்லி (அவன் தாய் தந்தையர்)
வைத்தார்கள்,
எ-று. (9)
758. மங்கையர்தங் கொங்கைக்குவட் டிழிந்துநிறை மதிபோற்
பொங்குதவி சினிடைச்சிங் கபோதகத்தி னடிநற்
செங்கமல நிலமடந்தைச் சென்னிமிசை யணிந்து
பொங்குமிமி லுடையவிடை போலநடந் தானே.
(இ-ள்.) (அதன்
மேல் அவன்), மங்கையர்
தம் -
ஸ்த்ரீமார்களுடைய, கொங்கைக்குவட்டிழிந்து -
ஸ்தன
சிகரத்தினின்றும் இறங்கி
(அதாவது : தனப்பாலுண்டு
அதினின்றுமிழிந்து விளையாடி அதன் பிறகு),
நிறைமதிபோல் -
கலைநிறையும்படியான சந்திரன் விருத்தியடைவது போல (வளர்ந்து),
பொங்கு - அழகினாலுயர்ந்த, தவிசினிடை -
மெத்தையின் பேரில்,
சிங்கபோதகத்தின் - ஸிம்மக்குட்டியைப்போல
(தவழ்ந்து திரிந்து),
இழிந்து - அதினின்றுமிறங்கி,
(நடக்கத் தொடங்கி), அடி -
பாதமாகிற, நல் - நன்மையாகிய, செங்கமலம்
- செந்தாமரைப்
புஷ்பத்தை, நிலமடந்தை - பூமிதேவியின், சென்னிமிசை
- சிரசின்
பேரில், அணிந்து - சூட்டி, (அதாவது : நிலத்தில் அடியைவைத்து),
பொங்கு - பெரிதாகிய, இமிலுடைய - திமிலையுடைய, விடைபோல -
விருஷபத்தைப்போல, நடந்தான் - நடந்து விளையாடினான், எ-று.
இழிந்து என்பது இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது. (10)
|