என்ன - என்று கேட்க, பவித்திரமுனியும் - பரிசுத்தனான
அப்பிரீதிங்கர முனிவனும், பைம்பொன் - பசுமை பொருந்திய
பொன்னாபரணங்களையணிந்த, கணிகை பால் - தாசியினிடத்தில்,
பட்ட வெல்லாம் - உண்டானவைகளை யெல்லாம், (அதாவது : அவள்
தர்மங்கேட்டது விரதங்கொண்டது முதலியவைகளே யெல்லாம்),
விரித்துரைப்ப - விளக்கிச் சொல்ல, கேட்டு - அதைக்கேட்டு, உடன் -
அப்பொழுதே, வியந்து - விசித்திர மதி (முனிவன்) ஆச்சரியமுற்று,
வெய்துயிர்த்து - பெருமூச்சு விட்டு, வேட்கை - காமவிருப்பமானது,
உருத்தெழ - தனக்குள் உருவமுற்று அதிகமாக உண்டாக, இருக்கை -
அப்பட்டணத்தில் அவளிருக்கும் இடத்தையும், நாமம் - பெயரையும்,
உருவமும் - ரூபத்தையும், தெரிய - விளங்கும்படியாக, கேட்டான் -
அவனிடம் வினவினான், எ-று. (42)
855. வினையின தெழுச்சி தன்னால் வேதனை வசத்த னாகி
முனியவன் றனிய னாகிப் பாரணைக் கென்று போனான்
றனதிடங் குறுகக் கண்ட தையலா ளுவந்து சால
விநயத்தி னிறைஞ்சிக் கேட்டாள் விரதத்தின் பலனை யன்றே.
(இ-ள்.) வினையினது - கருமத்தினது, எழுச்சி தன்னால் -
உதயத்தினாலே, (மேற் கூறியபடி), வேதனை - காம வேதனையின்,
வசத்தனாகி - வசமானவனாகி, முனியவன் - அவ்விசித்ரமதி
முனிவனானவன், தனியனாகி - தனியானவனாய், பாரணைக்கென்று -
ஆஹாரங்கொள்ளப் போக வேண்டுமென்று, போனான் - (மறுநாள்
சரியா மார்க்கமாக மாயாச்சாரமாய்ப்) போனான், (அவ்வாறு
சென்றவன்), தனதிடம் - தன்னுடைய வீட்டை, குறுக - அடைய,
கண்ட - பார்த்த, தையலாள் - அந்தப் புத்தி ஷேனையென்னும்
கணிகையானவள், உவந்து - ஸந்தோஷித்து, சால - மிகவும்,
விநயத்தின் - மரியாதையாக, இறைஞ்சி - வணக்கஞ்செய்து,
விரதத்தின் - முன்னாள்தான் கொண்ட விரதத்தினது, பலனை -
பிரதிபலனாகுந் தன்மையை, கேட்டாள் - (அவனிடம்)
வினாவுதலுற்றாள், எ-று. (43)
856. மோகரா கத்த வாய கதைகளை முனிவன் சொல்லப்
போகரா கத்த வார்த்தைப் புதியனோ முனிவ னென்று
நாகரா கத்திற் கெட்டார் கதைகளை நவிற்றப் பின்னும்
வேகரா கத்த னாக மெல்லியல் வெறுப்பச் சொன்னாள்.
(இ-ள்.) (அவள் அவ்வாறு வினவியதற்கு), முனிவன் -
விசித்திரமதி முனிவன், மோகராகத்தவாய - மோகவாஞ்சையாகிய,
கதைகளை - சரிதங்களை, சொல்ல - வசனிக்க, (புத்திஷேனை),
போகராகத்த - காமபோக வாஞ்சையாகிய, வார்த்தை - வசனத்தைப்
பேசுகின்ற, முனிவன் - இம்முனிவன், புதியனோ - நேற்று
வந்தவனன்றிப் புதியவனோ?, என்று - என்று நினைத்து, (அவனை
உற்று |