நின்ற - அனுஷ்டித்து உபசருக்கங்களைப் பொறுத்துத் தளர்வின்றி
நின்ற, வீரன் - வீர புருஷனாகிய இம்முனிவனுடைய, தன்மை -
ஸ்வபாவத்தை, யார் - எவர்கள், அறியவல்லார் - அறிய வல்லமையை
யுடையவர்கள், (ஞானிகளால்தான் அறிய முடியும்), எ-று. (74)
887. கூன்சிலைப் பகழி கோத்துக் கொடியவன் குழைய வாங்கி
மான்களும் மரையும் வீழ்த்து முனிவனை வருத்திப் பாவி
தான்சில நாளி லேழா நரகத்தைச் செறிந்து காட்டிற்
றேன்சுடு தீயி னீப்போற் றிகைத்துப்போய் நிலத்து வீழ்ந்தான்.
(இ-ள்.) (அதன்மேல்), கொடியவன் - பாபிஷ்டனாகிய
அவ்வேடன், கூன் - வளைவையுடைய, சிலை - வில்லில்,
பகழிகோத்து - அம்பைத் தொடுத்து, குழைய - வளையும்படியாக,
வாங்கி - நாரியை இழுத்துவிட்டு, (அதனால்), மான்களும் -
மான்களையும், மரையும் - சமரீமிருகங்களையும், வீழ்த்து கொன்று
வீழ்த்தி, முனிவனை - முனிவானை, வருத்தி - உபசருக்கமும் செய்து,
பாவிதான் - அந்தப் பாவியானவன், சில நாளில் - கொஞ்சநாளில்
(மரணமடைந்து), ஏழாநரகத்தை - தமத்தமப் பிரபையென்னும் சப்தம
நரகத்தில், செறிந்து - சேர்ந்து, காட்டில் - வனத்தில், சுடுதீயின் -
சுடுகின்ற அக்னியில், (அகப்பட்ட), தேனீப்போல் - தேனீயானது
மயக்கமுறுவதுபோல, திகைத்து - மயங்கி, போய் - (அந்நரகத்தில்
மேல் பாகத்திலிருந்து தலை கீழாகத் தொங்குகின்ற நரகாவாச
உபபாதத்தினின்றும் சரீர நிறைந்து) போய், நிலத்து - அந்நரகத்தின்
அடிப்பூமியில், வீழ்ந்தான் - விழுந்தான், எ-று. (75)
888. வீழ்ந்தவக் கணத்துத் தண்டால் விழுப்பற வதுக்கி யிட்டுச்
சூழ்ந்தவ ருருக்கும் செம்பின் குட்டுவத் துடம்பு காட்டிட்
டாழ்ந்தவன் றன்னை வாங்கிச் செக்கிலிட் டரைத்திட் டாற்றச்
சூழ்ந்தமுள் ளிலவ மேற்றித் துயரங்கள் பலவுஞ் செய்தார்.
(இ-ள்.) வீழ்ந்த - அப்படி நரக பூமியில் விழுந்த, அக்கணத்து
- அப்பொழுதே, சூழ்ந்தவர் - அவ்விடத்துச் சூழ்ந்திராநின்ற புராதன
நாரகர்கள், (இப்புது நாரகனைக் கண்டதும்), தண்டால் - தடிகளால்,
விழுப்பற - அனாச்சாரம் நீங்கும்படி, அதுக்கியிட்டு - அடித்து,
உருக்கும் - உருக்கப்பட்ட, செம்பின் குட்டு வத்து - செப்புக்
குழம்பிலே, உடம்பு - இவனுடைய சரீரத்தை, காட்டிட்டு - காண்பித்து,
(அதாவது : பரிசிக்கத்தள்ளி), ஆழ்ந்தவன் தன்னை - அதில் வீழ்ந்து
துடிக்கின்ற அவனை, வாங்கி - அதினின்றும் எடுத்து,
செக்கிலிட்டரைத்திட்டு -செக்கில் போட்டுச் சரீரம் நொறுக்கும்படியாக
ஆட்டி, ஆற்ற - மிகவும், சூழ்ந்த - சேர்ந்த, முள்ளிலவம் -
முட்களையுடைய முள்ளிலவ மரத்தின்மேல், ஏற்றி - ஏறும் |