548மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

ஆகாயத்தில்,   எழுந்து  -  கிளம்பி, திக்கை - ஸ்ரீநிலயக்கோயிலின்
எத்திக்குகளிலும்,  நின்று  -  வியாபித்து  நின்று,  பரிமளமாக்கும் -
வாசனையை நிரப்பா நின்றனவாகும், எ-று. தம் - சாரியை. திக்கை -
உருபுமயக்கம். . (119)

 1167. வீதிக ளகன்று காதம் வேதிகை யிரண்ட வாகு
     மோதிய கும்பத் திப்பா லொன்பது தூபை நிற்கும்
     நீதியாற் றோர ணம்பத் தவற்றிடை நின்ற வப்பாற்
     போதொடு பலிக ளேந்தும் பொன்செய்பீ டங்க ளாமே.

    (இ-ள்.)    வீதிகள்  -   (அந்த      வாசற்படியினுள்ளேயும்
அதனப்பியந்தரத்திலும்) மஹாவீதிகள், காதம்  அகன்று  - ஒருகாதம்
அகலமாகி, வேதிகையிரண்டவாகும் - (வீதியையும் கோணபூமியையும்
வேறுபடுத்துவதற்கு        வீதியினிருபக்கத்திலும்)        இரண்டு
வேதிகளையுடையன வாகும்,   ஓதிய - (வீதிவழியில்   வாசற்படியின்
உட்புறத்துமுன்)   சொல்லப்பட்ட,   கும்பத்து  -  தூபகலசமிருக்கும்
மேடைக்கு,    இப்பால் -  அப்பியந்தர  பாகத்தில்,  (வீதியிலேயே),
ஒன்பது   தூபை   -   ஒன்பது     ஸ்தூபைகளானவை,  நிற்கும் -
ஒன்றின்முன்னொன்றாக     வரிசையாய்     நிற்கும்,    நீதியால் -
வரிசையினால், தோரணம்  பத்து - பத்துத்தோரணங்கள், அவற்றிடை
- அத்தூபைகளை  மத்தியவர்த்தியாகச்செய்து,  நின்ற - இராநின்றன,
அப்பால் -  அதற்கும்   உள்ளே,  (அவ்வீதிவழியில்),  போதொடு -
புஷ்பங்களோடு,    பலிகள்   -    பலிபிண்டங்களை,    ஏந்தும் -
தரிக்கும்படியான, பொன்செய் -  பொன்னாற் செய்யப்பட்ட, பீடங்கள்
- (நாலு வீதிக்கும் வீதிக்கொன்றாக நாலு)  பீடங்கள், ஆம் - ஆகும்.
எ-று. (120)

 1168. கோசமூ வைந்திற் கந்த குடியினைச் சூழ வந்து
      மாசிலாப் படிக பித்தி மார்பள வுயர்ந்தீ ரெட்டா
      லாசைபோ னிறைவி லாத நிலங்கள்பன் னிரண்ட வாகி
      யீசன்மா கணங்க ளீரா றிருக்கைதா னிருக்கு மாறே.

     (இ-ள்.)   கோசமூவைந்தில் -  பதினைந்து   குரோசங்களால்,
கந்தகுடியினை  -   கந்தகுடி  மண்டபத்தை, சூழவந்து - சுற்றிவந்து,
மாசிலா  -   களங்கமில்லாத,   படிகபித்தி   -   ஸ்படிகச்சுவர்கள்,
மார்பளவுயர்ந்து  -  மார்பளவுன்னதமாகி,  ஈரெட்டால் -   பதினாறு
சுவர்களாலான,  ஆசைபோல் -  ஆசையைப்போல,  நிறைவிலாத -
எவ்வளவு   வந்து   சேர்ந்தாலும்   நிரம்புதலில்லாத,     நிலங்கள்
பன்னிரண்டவாகி   -    த்வாதச  கோஷ்ட  பூமிகளாகி,   ஈசன் -
ஜினேந்திரனுடைய,  மா -  பெருமைபொருந்திய, கணங்கள் ஈராறு -
த்வாதச கணங்கள்,   இருக்குமாறு  -  இருக்குபடியான, இருக்கை -
ஸ்தானங்கள், தான் - இவைகள்தானாகும், எ-று.