பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 113


 

 240. மிக்க லாபத்தின் மேவிய சிந்தையான்
     செக்கர் வான மெனத்திகழ் மேனியான்
     திக்க னைத்துந் திகழ்ந்ததோர் தேசினாற்
     புக்க னன்புரம் வந்தெதிர் கொள்ளவே.

     (இ-ள்.)  (அவ்வாறடைந்த)  மிக்க - மிகுதியான,  லாபத்தின் -
இலாபத்திலே,  மேவிய - பொருந்திய, சிந்தையான் - மனதுடையவன்,
செக்கர்வானமென    -    அந்திச்    செவ்வானம்போல,   திகழ் -
பிரகாசியாநின்ற, மேனியான் - சரீரத்தையுடையவன், திக்கனைத்தும் -
எத்திக்குகளிலும், திகழ்ந்தது - பிரகாசியா நின்றதாகிய, ஓர் - ஒப்பற்ற,
தேசினால் - ஒளியால், புரம்  -  அப்பட்டணத்திலுள்ள வர்த்தகர்கள்,
வந்து எதிர்கொள்ள - வந்து எதிர்கொண்டு பேசியழைக்க, புக்கனன் -
அப்பட்டணத்தில் புகுந்தான், எ-று.                          (17)

 241. அந் நகரி னழகும் பெருமையும்
     மன்ன னன்மையும் வாணிபத் தாக்கமும்
     சொன்ன வைபிற ழாமையுஞ் சோரர்தா
     மின்மை யுங்கண் டிருக்கையு மேவினன்.

     (இ-ள்.)    (அவ்வாறு    புகுந்த    அவன்)    அந்நகரின் -
அப்பட்டணத்தின்,    அழகும்    -   அழகையும்,   பெருமையும் -
மேம்பாட்டையும்,   மன்னன்    -    அரசனுடைய,   நன்மையும் -
நற்குணத்தையும்,   வாணிபத்து   -   வர்த்தகத்தினது,  ஆக்கமும் -
செல்வத்தையும், சொன்னவை - சொன்ன சொற்கள்,  பிறழாமையும் -
தவறாத  தன்மையையும்,  சோரர்தாம்   -   திருடர் முதலானவர்கள்,
இன்மையும்   -   இல்லாத  தன்மையையும்,   கண்டு  -   பார்த்து,
இருக்கையும்   -   அந்தப்பட்டணத்தில்  வாசமாய்த்  தங்கவேண்டு
மென்கிற  எண்ணத்தை,  மேவினான்  -  மனத்திற்  பொருந்தினான்,
எ-று.

     உம் - அசை.                                      (18)

 242. மற்றிம் மாநக ரத்திலிவ் வான்பொருள்
     அற்ற மாகநல் லார்கையில் வைத்தணி
     பத்ம சண்டம தெய்தியோர் பாங்கிலே
     சுற்ற மும்மழைத் தென்வழித் தொக்கபின்.

     (இ-ள்.) (அங்ஙனமெண்ணி) மற்று - பின்னை,  இம்மாநகரத்தில்
- இப்பெரிய  பட்டணத்தில்,  இவ்  வான்பொருள்   -   என்னுடைய
இப்பெரிய  பொருள்களை,  அற்றமாக - மறைவாக, நல்லார்கையில் -
பெரியோர்களிடத்தில்  அதாவது :  குணவந்தர்களிடத்தில்), வைத்து -
வைத்துவிட்டு, அணி - அழகையுடைய, பத்ம