பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 169


Meru Mandirapuranam
 

 366. வேபியா பசியின் வாடி விழுமுயிர்க் கீயக் கண்டு
     கோபியா வஞ்ச நெஞ்சிற் கருணையொன்றின்றிச் செத்துந்
     தீபியாப் பிறந்து நின்று மகனையுந் தின்ற விந்தப்
     பாபியைப் போல கில்லார்க் கருணையைப் பயில்கை நன்றே.

   (இ-ள்.)   வேபியா  -   வருத்துகின்ற  (சுடுகின்ற),  பசியின்  -
பசியினால்,   வாடி - வாட்டமுற்று, விழும் - சோர்கின்ற, உயிர்க்கு -
(வறுமையுற்ற)  ஜீவர்களுக்கு,  ஈய -  (வேண்டியவற்றைக்)  கொடுக்க,
கண்டு  -  அதைப்  பார்த்து,  கோபியா - மிகுதியான குரோதமுற்று,
வஞ்சம் - கபடத்துவமுடைய,நெஞ்சில் - மனதில், கருணை ஒன்றின்றி
- ஜீவதயை   சிறிதுமில்லாமல்,   செத்தும்  -  இறந்தும்,   தீபியா -
புலியாகி,  பிறந்து  - ஜனித்து,  நின்று - காட்டில் நிலைபெற்றிருந்து,
மகனையும் -   முன்   தனது   குமாரனாகியவனையும்,    தின்ற  -
கொன்றுதின்ற,   இந்தப்   பாபியைப்   போலகில்லார்  -    இந்தப்
பாபிஷ்டியைப்போலாகாதவர்களாய்,  (எல்லோரும்)  கருணையை  -
தயவை,பயில்கை - சேர்ந்திருத்தல்,நன்று - நல்லதாகும், எ-று. (10)

 367. பிறவிக ளனந்தந் தம்மிற் பெற்றதாய்ச் சுற்ற மல்லால்
     உறவிக ளொன்று மில்லை யூனினை யுண்டு வாழ்வார்
     மறமலி மனத்த ராய்த்தம் மக்களைத் தின்கின் றாரென்
     றிறைவனை யிவ ளுரைத்தாளின்றுதன் மகனைத்தின்றாள்.

    (இ-ள்.) பிறவிகள் - பிறப்புக்களானவை, (அநாதியாக உண்டாகி),
அனந்தம்    -   முடிவில்லாதனவா   யிருக்கின்றன    (அதாவது :
இதுவரையில் இத்தனை  ஜன்மமெடுத்தோமென்னும்  கணக்கில்லாமல்
இராநின்றன), தம்மில் -  அவைகளில்,  (ஆராய்ந்து  பார்க்குமிடத்து),
பெற்ற  -  ஈன்ற,   தாய்  -   அன்னையாகிய,   சுற்றமல்லால்  -
பந்துவல்லாமல், உறவிகளொன்றும் - யாதொரு ஜீவனும்,  இல்லை -
இவ்வுலகில் இல்லாதனவாகும், (அப்படியிருப்பதனாலே),  ஊனினை -
மாமிசத்தை, உண்டு - புசித்து, வாழ்வார் - வாழ்கின்றவர்கள், மறமலி
-  பாபத்தினால்  நிறைந்த,  மனத்தராய் - மனத்தையுடையவர்களாய்,
தம் -  தங்களுடைய, மக்களை - பிள்ளைகளை, தின்கின்றாரென்று -
தின்னுகிறார்களென்று,  இறைவனை -  சர்வக்ஞனால் சொல்லப்பட்ட
சாஸ்திரத்தை,  இவள்  - இந்த ஸு மித்திரையானவள், உரைத்தாள் -
முன்னே சொன்னாள், (அப்படிச் சொல்லியும்), இன்று - இப்பொழுது,
தன் -  தன்னுடைய,  மகனை  -  குமாரனை,  தின்றாள்  -  தானே
புலியாகிப்  பிறந்து  தின்றுவிட்டாள்,  (சாஸ்திரம்  தெரிந்தும் இப்படி
ஆய்விட்டாள்  என்றபடி), எ-று.


     இறைவன் - என்பது ஆகுபெயராய் இறைவனால்  செய்யப்பட்ட
சாஸ்திரத்தை  உணர்த்திற்று.  இறைவளை  என்றும் பாடபேதமுண்டு;
அங்ஙனங்கொள்ளின் அதற்குத் தக்கபடி பொருளுரைத்துக் கொள்க.
(11)