368. கருதினாற் கருதிற் றெல்லாங் கருணையா லீயுங் கற்பத்
தருவின்மே லுருமு வீழச் சாய்ந்தது போல மாய்ந்து
பருமத யானை வேந்தன் றேவிமேற் பற்றுள் ளத்தாற்
றிருமக ளனைய ராம தத்தைதன் சிறுவ னானான்.
(இ-ள்.) (இது நிற்க, அவ்வாறு புலி பத்திரமித்திரனைக்
கொன்றபின்) கருதினார் - இச்சித்தவர்கள், கருதிற்று - இச்சித்தவை,
எல்லாம் - யாவையும்,கருணையால் - தயவால்,ஈயும் - கொடுக்கின்ற,
கற்பத்தருவின்மேல் - கற்பகமரத்தின்மேல், உருமு - இடி, வீழ -
வீழ்தலாலே, சாய்ந்ததுபோல - அது சாய்ந்து மறைந்து
போவதைப்போல, மாய்ந்து - அப்பத்திரமித்திரன் இறந்து, பரும் -
பருத்த, மதம் - மதம் பொருந்திய, யானை - யானைக்குத்
தலைவனாகிய, வேந்தன் - சிம்மஸேனமகாராஜனுடைய, தேவிமேல் -
மனைவியின்மேல், பற்றுள்ளத்தால் - ( தனது நியாயத்தைக்
கண்டுபிடித்ததனாலேற்பட்ட ) ஆசையினால், திருமகளனைய -
இலக்குமிக்குச் சமானமாகிய, ராமதத்தை தன் - அந்த இராமதத்தா
தேவியினுடைய, சிறுவனானான் - புத்திரனாகி அவள்
கருப்பத்திலடைந்தான், எ-று. (12)
369.கண்ணிடை வெளுப்பெலாம்போய் முகத்திடை பரக்கக் காணா
நுண்ணிடை தோன்றவிம்மா கண்ணகில் கறுத்து நோக்கிப்
பண்ணிடைக் கிடந்த தீஞ்சொற் பவழவாய் பாண்டு வாக மண்ணிடைத் தோன்ற மைந்தன் மதிபெற்ற திசையை யொத்தான்.
(இ-ள்.) (அவன் அவ்வாறு இராமதத்தையின் கருப்பத்திலடைந்த
பிறகு) கண்ணிடை - (இராமதத்தைக்கு) கண்களிடத்துள்ள,
வெளுப்பெல்லாம் - வெண்மை நிறமெல்லாம், போய் - சென்று,
முகத்திடை - முகத்தில், பரக்க - வியாபிக்க, காணா -
தெரியாமலிருந்த, நுண் - மெல்லிதாகிய, இடை - இடையானது,
தோன்ற - தெரிய, விம்மா - கதித்து (விம்மி), நகில் - ஸ்தனங்களின்,
கண் - கண்கள், கறுத்து - கறுப்பாகி, நோக்கி - நோக்க, பண்ணிடை
- கீதத்தினிடையே, கிடந்த - தங்கியிராநின்ற, (அதாவது : கீதம்
போன்ற), தீம் - இனிமையாகிய, சொல் - வசனத்தைப் பேசக்கூடிய,
பவழவாய் - பவழம்போற் சிவந்த வாயானது, பாண்டுவாக -
வெண்மையாக, மண்ணிடை - இப்பூமியில், மைந்தன் - (மேற்கூறியபடி
கருப்பத்தில் உதித்த) புத்திரன், தோன்ற - பிறக்க,(அரசன்) மதிபெற்ற
- சந்திரன் உதயமாகப்பெற்ற, திசையை ஒத்தான் - திக்கானது
பிரகாசிப்பது போல சந்தோஷத்தால் பிரகாசித்தான், எ-று. (13)
370. வேயெனத் திரண்டமென்றோண் மெல்லிய லோடும்வேந்த
னாயிரக் கிரணன் சென்ற திசையொடு வானை யொத்துப்
பாயிரும் பரவை ஞாலம் பைம்பொனா லார்த்தி நாமம்
சீயசந் திரனென் றோகைத் திசைதொறும் போக்கினானே.
|