407. வந்தமா தவன்றன் செந்தா மரையடி வணங்கிப் பூத்தூ
யந்தமி லுவகை யெந்தி யம்பொன்மங் கலங்க ளேந்தி
இந்துவா ணுதவி னாரோ டெதிர்கொண்டு பணிந்து புக்குச்
சுந்தரத் தலத்தி னேற்றித் துகளடித் துகிலி னீக்கி.
(இ-ள்.) (அப்போது சிம்மச்சந்திரன்) இந்து - சந்திரப்
பிறைபோன்ற, வாள் - ஒளி பொருந்திய, நுதலினாரோடு -
ஸ்திரீமார்களுடனே, எதிர்கொண்டு - முன்னேபோய், வந்த -
அவ்வாறு வந்த, மா - பெரிய, தவன் தன் - தவத்தையுடைய அந்த
முனிவனின், செம் - சிவந்த, தாமரை - தாமரை மலர்போன்ற, அடி -
பாதங்களை, வணங்கி - நமஸ்கரித்து, (அவற்றிலே),பூ - புஷ்பங்களை,
தூய் - தூவி, அந்தமில் - முடிவில்லாத, உவகை - சந்தோஷத்தை,
எய்தி - அடைந்து, அம்பொன் - மிகுந்த அழகினையுடைய,
மங்கலங்கள் - அஷ்ட மங்கலங்களை, ஏந்தி - எடுத்து, பணிந்து -
மீண்டும் வணங்கி, புக்கு - அவரை அழைத்துக்கொண்டு
அரண்மனைக்குள்ளே புகுந்து,சுந்தரம் - அழகு பொருந்திய, தலத்தின்
- இடத்தில், ஏற்றி - உட்காரவைத்து, அடித்துகன் - அவருடைய
பாததூளியை, துகிலின் - தனது உத்தரீய வஸ்திரத்தினால், நீக்கி -
துடைத்து, எ-று.
அரசன் முனிவரைக் கண்டவுடன் முதலில் ஒருமுறை
வணங்கி
மலர்களால் அவர் பாதங்களில் அர்ச்சித்து அஷ்டமங்கலங்களேந்தி
மீண்டும் ஒருமுறை வணங்கினானென்க. (51)
408. மணிமலர்க் கலச நீரான் மாசறக் கழுவி வாசந்
தணிவிலா மாலை சாந்தஞ் சருவினா லருச்சித் தாற்றி
யிணையிலா முனிவன் பாதம் பணிந்துநா லமிர்த மீந்தாங்
கணியினாற் பணியும் போழ்திலமரருஞ் சிறப்புச் செய்தார்.
(இ-ள்.) மணி - அழகிய, மலர் - புஷ்பஞ் சூட்டப்பெற்ற, கலசம்
- கும்பத்திலுள்ள, நீரால் - ஜலத்தினால், மாசற - அழுக்கு நீங்க,
கழுவி - அப்பாதத்தைச் சுத்திகரித்து, வாசம் - வாசனையில்,
தணிவில்லா - குறைவில்லாத, மாலை - பூமாலைகளாலும், சாந்தம் -
ஈந்தனத்தாலும், சருவினால் - பலகாரங்களினாலும், அருச்சித்து -
(அவர்முன்) அர்ச்சனை பண்ணி, ஆற்றி பூசனையை முடித்து,
இணையிலா - உவமையில்லாத, முனிவன் - அம்முனிவரது, பாதம் -
பாதங்களில், பணிந்து - (மற்றொருமுறை) வணங்கி, நாலமிர்தம் -
நால்வகையாகிய ஆகாரத்தை, ஈந்து - அவருக்கு அளிக்க,
(அவ்வாறு), அணியினால் - அழகோடு, பணியும் போழ்தில் - அவன்
சிறப்புச்செய்து அம்முனிவரை வணங்குகிற காலத்தில், ஆங்கு -
அவ்விடத்தில், அமரரும் - தேவர்களும், சிறப்பு - பஞ்சாச்சரியத்தை,
செய்தார் - செய்தார்கள், எ-று.
ஈய என்பது ஈந்து எனத் திரிந்துவந்தது. (52)
|