பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 195


Meru Mandirapuranam
 

னுடனே, புணர்ந்து - சேர்ந்து, உறக்கமென்னும் - நித்திரையென்கின்ற,
மயால்  செய்யும்  -  மயக்கத்தைச்  செய்கின்ற,  மடந்தைதன்னை -
மாதை, மனத்தகத்து - மனத்தினுள்ளே, அகற்றி - இல்லாமல் போக்கி,
மாண்பின்     -     ஸ்வசம்வேதன    ஞானப்பிரத்தியக்ஷமென்னும்
மாக்ஷிமையினால்,   அயாவுயிர்த்து   -   இளைப்பாறி,  அண்ணல் -
பெருமையிற்  சிறந்தவனாகிய  அச்சிம்மச்சந்திர  முனிவான், அரும் -
தாங்குதற் கரிதாகிய, தவக்கொடியை - தபஸாகிற ஸ்திரீயை, இருக்கை
வைத்தான்    -    தன்னிடத்திலே     இருக்கையாகச்    சேர்த்து
வைத்துக்கொண்டான், எ-று. (66)

வேறு.

 423. வினைகளுக் குதிர்ச்சி வேட்கை நீக்கிமெய் வசம்வரல்
     புனைவரும் பொறிச் செறிப் புயிர்க்கழிவு போற்றுதல்
     நினைவின தொருக்கமு நெறிவிளக்க முஞ்செயு
     மனசன தவத்தினோ டருந்தவன் பொருந்தினான்.

   (இ-ள்.)  (மேலும்) வினைகளுக்கு - சில கர்மங்களுக்கு, உதிர்ச்சி
- நிர்ஜரையாக,  வேட்கை  -  ஆசையை,  நீக்கி - விலக்கி, மெய் -
சரீரமானது,  வசம்  வரல்  -  ஆத்மாப்பியாச  அறிவு  காட்சிகளில்
வியவகரிப்பதற்கு  வசமாக  வருதலும்,  புனைவரும் - சேர்க்கையாக
வராநின்ற,  பொறி - பஞ்சேந்திரியங்களின், செறிப்பு - அடக்கமாகிய
விஷய  ஸம்யமமும்,  உயிர்க்கு  -  ஸ்தாவர  சங்கம ஜீவன்களுக்கு
(ஏற்படும்),  அழிவு  -  கெடுதியை (நீக்கி), போற்றுதல் - அவற்றைப்
பாதுகாத்தலாகிய  பிராணி சம்யமமும், நினைவினது - தியானத்தினது,
ஒருக்கமும்  -  சேர்க்கையும்,  நெறி  -  மோட்ச   மார்க்கத்தினது,
விளக்கமும்,  - பிரகாசமுமாகிய (இவைகளை யெல்லாம்), செய்யும் -
செய்தற்குக்  காரணமாகிய,   அனசன  தவத்தினோடு  -  அன்னம்
புசியாமல்   உபவாசமிருந்து   செய்யும்படியாகிய   முதல்  பாஹிய
தவத்தினோடு,  அருந்தவன்  - அரிய தவத்திற்குரிய அம்முனிவரன்
பொருந்தினான்  - சேர்ந்தான், எ-று. அசனம் - அன்னம் புசித்தல்,
அனசனம் - அன்னம் புசியாத உபவாசம். (67)

 424. புகாமிகிற் பொறிமிகு மனசனம் பொருந்திடின்
     நெகாவுடன் புடன்படாது நாட்க ணீதி மாதவன்
     புகாவினைச் சுருக்க மெய் யுடன்படும் பொறிகளும்
     மிகாவென விரும்பியாவ மோதுரிய மேவினான்.

    (இ-ள்.)  புகா  -  அசனமானது,  மிகின் - மிகுந்தால், பொறி -
இந்திரியங்கள்,  மிகும் -  விஷயங்களில் விருத்தியடையும் (அதனால்
ராகாதிகள்    அதிகமாகும்;   அதனால்   கர்மபந்தத்துக்குக்  காரிய
காரணமாகும்),   அனசனம்  -  உபவாசத்தையே,  பொருந்திடில்  -
சர்வதா அனுஷ்டித்தால், உடம்பு - இச்சரீரமானது, நெகா -