தவத்தையுடைய சிம்மச்சந்திர முனிவன், மனத்தை நோக்கும் -
பிறருடைய மனோநிலையைப் பார்த்தறியும்படியான, போதியின் -
மனப்பரியாய ஞானத்தால், உணர்ந்து - தான் தெரிந்து, அறத்தை -
ஸ்ரீ ஜிநதருமத்தை, புரவலன் - பூரண சந்திரனாகிய அரசன், புரிந்து -
விரும்பி, கொள்ளும் - கைக்கொள்ளுவான், யாதும் - எவ்வளவும்,
நீகவல வேண்டா - நீ வருத்தப்படவேண்டாம், அதனுக்கே -அதற்கே,
ஏதுவாக - காரணமாகும் படியாக,ஓதும் -என்னால் சொல்லப்படுகின்ற,
இக்கதையைக் கேட்டு - இந்தச் சரித்திரத்தைக் கேட்டு, நீ -நீ,அவற்கு
- அக்குமாரனுக்கு, உரைக்க - சொல்லுவாயாக, என்றான் - என்று
சொன்னான், எ-று. (96)
453. அடக்கத்தைப் பொதிந் துயிர்க்க ணருளினை யூறி யாறித்
தொடக்கமு முடிவு மொத்துத் தொடுத்ததோர் மாலை தன்னை
எடுத்துட னாற்றி னாற்போன் றிதத்தையெவ் வுயிர்க்கு மாக்கும்
வடுப்பரிந் திருந்த சொல்லான் மாதவ னுரைக்க லுற்றான்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லி) அடக்கத்தை - சம்யமத்தை,
பொதிந்து - (தன்னிடத்தே) சேர்த்து, உயிர்க்கண் - சகல
ஜீவன்களிடத்திலும், அருளினை - தயவை, ஊறி - மனத்தில் சுரந்து
(அதாவது : உண்டுபண்ணி), ஆறி - அதனால் ஆறுதலடைந்து,
(அதாவது : பகையென்பதின்னிச் சமத்துவி பரிணாமத்தில் தணிந்து),
தொடக்கமும் - ஆரம்பமும், முடிவும் - முடிதலும், ஒத்து - சமமாக,
தொடுத்தது - தொடுக்கப்பட்டதாகிய, ஓர் மாலை தன்னை -
ஒருமாலையை, எடுத்து - தூக்கி, உடன் - ஒரு தன்மையாக
(அதாவது: வக்கிரமில்லாமல்) நாற்றினாற்போன்று - தொங்கவிடுவதைப்போன்று, இதத்தை - நன்மையை, எவ்வுயிர்க்கும் -
சகல ஜீவன்களுக்கும், ஆக்கும் - உண்டாக்குகின்றவனும், வடு -
குற்றங்களையெல்லாம், பரிந்து - விட்டு நீங்கி, இருந்த -
நற்குணத்தைச்
சேர்ந்திருந்த, சொல்லான் - வசனத்தை
யுடையவனுமாகிய, மாதவன் - மஹா தபஸையுடைய சிம்மச்சந்திர
முனிவரன், உரைக்கலுற்றான் - மேலே அக்கதையைச் சொல்லத்
தொடங்கினான், எ-று. (97) நான்காவது :
பூரணசந்திரன் அரசியற்சருக்கம் முற்றுப்பெற்றது.
|