‘நின்றுன்னை வந்தடைந்தார்" என்பதை, ‘உன்னை வந்தடைந்தார்"
என மாற்ற வேண்டும். பக்தர்கள் நிழலைப்போல நீங்காதிருக்க
வேண்டுமென்பது, ‘நிழலினீங்கானிறைந்த நெஞ்சமோடு" என்னும்
நன்னூற்பாயிரச் சூத்திரவடியாலுணரப்படும். (41)
வேறு.
495. காமனையுங் காலனையும் வென்றுலக மூன்றினுக்குஞ்
சேம நெறியருளிச் செந்தா மரைபுல்லிப்
பூமுதிராப் பிண்டிக்கீழ்ப் பொன்னெயிலுண் மன்னியநின்
னாம நவிற்றாதார் வீட்டுலக நண்ணாரே.
(இ-ள்.) காமனையும் - மன்மதனையும், காலனையும் - அந்திய
காலனாகிய இயமனையும், வென்று - ஜெயித்து, உலக மூன்றினுக்கும் -
மூன்று லோகத்திலுமுள்ள பவ்விய பிராணிகளுக்கு, சேமம் -
சௌக்கியமாகிற, நெறி - ஸன்மார்க்கத்தை, அருளி - உபதேசித்து,
செந்தாமரை - தேவர்களால் நியமிக்கப்பட்ட செந்தாமரைப்
புஷ்பத்தை, புல்லி - பாதத்தின்கீழ்ச் சேர்த்து, பூ - புஷ்பங்கள், முதிரா
- முதிர்ச்சியடையாத தன்மையையுடைய, பிண்டிக்கீழ் -
அசோகமரத்தின்கீழே, பொன்னெயிலுள் - பொன்னாலாகிய
ஸமவஸரணத்தில், மன்னிய - சேர்ந்திரா நின்ற, நின் - உனது, நாமம்
- பெயரை, நவிற்றாதார் - குணமறிந்து ஸ்துதிக்காதவர்கள், வீட்டுலகம்
- மோக்ஷ உலகத்தை, நண்ணார் - அடையமாட்டார்கள், (என்றும்
துதித்தான்), எ-று. (42)
வேறு.
496. இப்ப டித்துதித் தேகிய பின்னரே
துப்ப டுந்தொண்டை வாயவர் துன்னினா
ரொப்பி லாதவின் பத்துக் குளித்தன
னெப்ப டித்துறக் கத்தியல் பென்றியேல்.
(இ-ள்.) (அவன்) இப்படி - இந்தப்பிரகாரம், துதித்து -
ஸ்துதிசெய்து, ஏகிய பின்னர் - சைத்யாலயத்தினின்றும் நீங்கி
ஆஸ்தான மண்டபத்தையடைந்த பிறகு, துப்பு - செம்பவளத்தையும்,
அடும் - நிறத்தினால் ஜெயிக்கின்ற, தொண்டை -
கொவ்வைக்கனிபோன்ற, வாயவர் - வாயையுடைய தேவஸ்திரீகள்,
துன்னினார் - (அவனிடம்) வந்தடைந்தார்கள், ஒப்பில்லாத -
உவமையில்லாத, இன்பத்து - (அவர்களுடைய இன்பமாகிய)
சௌக்கியத்தில், குளித்தனன் - அந்த ஸ்ரீதரதேவன் முழுகினான்,
(அதாவது : அவ்வின்பத்தை அனுபவித்தான்), துறக்கத்து -
தேவலோகத்தினது, இயல்பு - ஸ்வரூபமானது, எப்படித்தென்றியேல் -
எப்படிப்பட்டதென்று நீ கேட்பாயானால், (அதைச் சொல்லுகிறேன்
கேட்பாயாக), எ-று. (43) |