உலாம் - வெளியில் வியாபிக்கின்ற, மொழியின் - மதுரவசனங்களது,
ஓசை - சத்தமுமாகிய இவைகள், தன்னுளங்கவர - தன்னுடைய
மனத்தைக் கிரகிக்க, இன்சொல்வீசாரத்து - வசனப்பிரவீசாரத்தில், ஓடு
நாள் - செல்கின்றகாலத்தில், எ-று. (87)
541. கொற்றவன் பூர சந்தன குணக்கட றோன்றிப் போகி
மற்றந்த விமானத் தின்கண் வைடூரியப் பிரபை தன்னுட்
பெற்றியாற் றோன்றித் தானும் வைடூரியப் பிரப னானான்
முற்றுமுன் னுரைத்த வாயு முதலவிம் மூர்த்திக் காமே.
(இ-ள்.) கொற்றவன் - அரசனாகிய, பூரசந்தன் -
பூர்ணச்சந்திரன், குணக்கடல் தோன்றி - (தனக்கு மேற்கூறியபடி)
ஸம்மியக்ஞானாதி குணமானது மிகவும் உண்டாக, போகி -
ஆயுரவஸானத்தில் போய், அந்த விமானத்தின்கண் - முன் சொன்ன
மஹாசுக்ர கல்பத்தில், வைடூரியப்பிரபை தன்னுள் -
வைடூரியப்பிரபையில், பெற்றியால் - தான் அடைந்த புண்ணியத்தின்
தன்மையால், தோன்றி - பிறந்து, தானும் - தானும்,
வைடூர்யப்பிரபனானான் - வைடூரியப் பிரபனென்னும்
பெயருடையவனானான், முன்னுரைத்த - முன்
பாஸ்கரப்பிரபதேவனுக்குச் சொன்ன, ஆயுமுதல - ஆயுஷ்யம்
முதலானவைகளாகிய, முற்றும் - முழுமையும், இம்மூர்த்திக்கு - இந்த
வைடூர்யப் பிரபதேவனுக்கும், ஆம் - ஆகும்., எ-று.
மற்று - அசை. (88)
வேறு.
542. பாடலின் மயங்கியும் பவழ வாயினா
ராடலின் மயங்கியு மரம்பை யாரொடு
மாடமுஞ் சோலையு மலையும் வாவியு
மூடுபோய் நீடவ ருவந்து வைகுநாள்.
(இ-ள்.) (இவ்வாறு இருவரும் உதித்தபின்) பாடலின் -
பாட்டுக்களினால், மயங்கியும் - மயக்கமடைந்தும், பவழவாயினார் -
பவழம்போற் சிவந்தவாயையுடைய நர்த்தன ஸ்திரீமார்களது, ஆடலின்
- நர்த்தனங்களினால், மயங்கியும் - பிரமையடைந்தும்,
அரம்பையாரொடு - தேவநர்த்தகிகளோடு, (கூடிக்கொண்டு),மாடமும் -
உப்பரிகைகளிலும், சோலையும் - உத்தியானவனங்களிலும், மலையும் -
பர்வதாதிகளிலும், வாவியும் - பத்மாதி தடாகங்களிலும், ஊடுபோய் -
இடையிடையிற் சென்று, நீடு - சௌக்கியத்தில் நீடிய, அவர் -
அத்தேவர்கள், உவந்து - சந்தோஷித்து, வைகுநாள் - அங்குத்தங்கி
யிராநின்றகாலத்தில், எ-று. (89) |