வேறு.
558. பகைவனுந் தனக்குத் தானே பாவங்கள் பயின்று சொல்லி
நகையமை நண்பு தானே நல்வினைக் கேதுவாயிற்
பகையுற விரண்டும் பாவ புண்ணியப் பயன்க ளாத
லிகன்மத யானை பாந்த ளிரண்டினுந் தெளிந்த தன்றோ.
(இ-ள்.) பகைவனும் - சத்துரு பரிணாமமுடையவனும்,
தனக்குத்தானே - தன்னுடைய ஆத்மனுக்குத் தானாகவே, பாவங்கள் -
பாப வசனங்களை, சொல்லி - கூறி, (அதன்படி செய்து) பாவங்கள்
பயின்று - பாவங்களிலே தங்க, நகையமை - இனிமையமைந்த,
நண்பும் - சினேக பரிணாமமும், தானே - தானாகவே, நல்வினைக்கு -
தனக்குப் புண்ணிய வினைகளை யுண்டுபண்ண, ஏது - காரணமாயிற்று,
ஆயின் - இவற்றை ஆராய்ந்து பார்க்குமிடத்து, (இவ்வாறு) பகை -
சத்துருத்துவமும், உறவு - மித்திரத்துவமும், (ஆகிய) இரண்டு -
இவ்விரண்டும், பாவபுண்ணியப்பயன்கள் - பாவபுண்ணியப்
பயன்களாய், (அதாவது : சத்துருத் தன்மை பாவத்திற்கும்,
மித்திரத்தன்மை புண்ணியத்திற்கும், பலன்களாக), ஆதல் - ஆவது,
இகல் - பராக்கிரமம் பொருந்திய, மதயானை - மதம் பொருந்திய
அசனிகோடமென்னும் யானை, பாந்தள் - குக்குட ஸர்ப்பம்,
இரண்டினும் - (ஆகிய) இந்த இரண்டினாலும் (அதாவது : யானை
புண்ணியமாகிய மித்திரபாவத்தால் வானுலகடைந்ததாலும், ஸர்ப்பம்
பாவமாகிய சத்துரு பாவத்தால் நரகமடைந்ததாலும்), தெளிந்தது -
தெளியப் பெற்றதாகும், எ-று.
பாவங்கள் - என்பது இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது.
அன்றோ - அசை. (105)
559. வாளரி யுழுவை கைம்மா வலையிடைப் பட்டு முய்வ
நீளர ணாய நல்ல வினையது நின்ற போழ்திற்
கோளரி யேறு தன்னைக் குறுநரி யேனுங் கொல்லும்
நீளர ணாய நல்ல வினையது நீங்கி னாங்கே.
(இ-ள்.) வாள் - ஒளி பொருந்திய, அரி - ஸிம்மம், உழுவை -
புலி, கைம்மா - யானை, (ஆகியவை) வலையிடைப்பட்டும் -
வலையிற்சிக்கினாலும், நீளரணாய - ஆத்மனுக்குப் பெரிதாகிய
ரக்ஷணையாகிய, நல்லவினையது - நல்ல புண்ணிய கர்மமானது, நின்ற
போழ்தில் - உதயத்தைக் கொடுத்து நின்ற காலத்தில், உய்வ -
பிழைப்பனவாம், நீள் - பெரிதாகிய, அரணாய - ரக்ஷணையாகிய,
நல்ல வினையது - நல்ல புண்ணிய வினையானது, நீங்கின் -
நீங்கினால், ஆங்கே - அவ்விடத்தே, கோள் - கொலை
செய்தலையுடைய, அரியேறுதன்னை - ஆண்சிம்மத்தையும்,
குறுநரியேனும் - குள்ளநரியாயிருந்தாலும், கொல்லும் - அது
கொன்றுவிடும், எ-று. (106) |