எட்டாவது :
வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம்.
813. அரச னாயநல் லரத னாயுதன்
பிரச மார்குழற் பிணைய னாரொடும்
வரைசெய் தோளவன் மகிழ்ந்த வார்த்தையை
யுரைசெய் வன்னினி யுரக ராசனே.
(இ-ள்.) உரகராசனே - தரணேந்திரனே!, அரசனாய -
இராஜாவாகியிருந்த, நல் - நன்மையாகிய, அரதனாயுதன் -
இரத்தினாயுத மஹாராஜன், வரைசெய் - பர்வதம்போல் கெட்டி
பொருந்திய, தோளவன் - புயத்தையுடையவனாய், பிரசம் - வண்டுகள்,
ஆர் - நிறைந்து மொய்த்திராநின்ற, (பூமாலைகளை யணிந்த), குழல் -
அளக பாரத்தையுடைய, பிணையனாரொடும் - பெட்டை மான்போல
மருண்ட பார்வையையுடைய ஸ்த்ரீமார்களுடன், மகிழ்ந்த -
சந்தோஷித்திருந்த செய்கையைப்பற்றிய, வார்த்தையை - சொற்களை,
இனி - இனிமேல், உரை செய்வன் - சொல்லுவேன், (என்று
ஆதித்யாபதேவன் அடியில் வருமாறு சொன்னான்), எ-று. (1)
814. வாம மேகலை மயிலஞ் சாயலார்
காமக் கோட்டியுட் கழுமுங் காதலாற்
சேம நல்லறஞ் செப்பிற் றீயிடை
யாமை போலவ னவல மெய்துமே.
(இ-ள்.) வாமம் - அழகிய, மேகலை -
மேகலாபரணத்தையணிந்த, மயில் - ஆண்மயில் போன்ற, அம் -
அழகிய, சாயலார் - சரீரச்சாயலையுடைய ஸ்த்ரீமார்களின், காமம் -
விருப்பம் பொருந்திய, கோட்டியுள் - கூட்டத்தினுள், கழுமும் -
பொருந்துகின்ற, காதலால் - மிகுதியான வாஞ்சையை
யுடைத்தானவனாகையினால், சேமம் - க்ஷேமத்தை
யுண்டுபண்ணுகின்ற, நல்லறம் - ஸ்ரீஜின தருமத்தை, செப்பில் -
அவனிடத்தில் சொல்லுமிடத்தில், தீயிடை - அக்கினியிலே அகப்பட்ட,
ஆமைபோல - ஆமையைப்போல, அவன் - அவ்விரத்தினாயுதன்,
அவலம் - வருத்தத்தை, எய்தும் - அடைபவனாயின், எ-று. (2)
815. அரசு மின்பமுங் கிளையு மாயுவும்
விரைசெய் தாரவன் வீயு மென்றெணான் |