நிந்தித்து, அவலமுற்று - மிக வருத்தமுற்று, அழுந்தி -
துக்கத்திலழுந்தி, இன்று - இப்பொழுது, மெய்ப்பட - உண்மையாக,
உணர்வு - ஸம்மியக்ஞானமானது, தோன்ற - உண்டாக,
விரதசீலத்ததாயது - விரதங்களையும் சீலாச்சாரங்களையும் தன்
சக்தியானு ஸாரத்தினால் அடைந்ததாகியது, இதன் தன் செய்கை -
இந்த யானையினுடைய செயலானது, இப்படித்து - இந்தப்
பிரகாரமானது, ஏந்து - மார்பிற்றாங்கிய, இளமுலையினார் தம் -
இளமையாகிய தனங்களையுடைய ஸ்திரீமார்களின், துப்பு -
பவளத்தையும், தொண்டை - கொவ்வைக்கனியையும், உறழ் - நிகர்த்த,
செவ்வாய் - சிவந்த வாயையும், (கொஞ்சுதலாலுண்டாகும் இன்பத்தின்),
பயன் - பலனை, சொல்லின் - சொல்லுமிடத்தில், இது -
இத்தன்மைத்தாகும், என்றான் - என்று சொன்னான், எ-று.
வஜ்ரதந்த முனிவன் இரத்னாயுதனுக்குச் சொன்னானென்றறிக. (56)
869. விரிதிரை வேலி ஞால காவலர் விழும வெந்நோ
யெரிபுரை நரகத் தன்றி வீழ்ந்திடார் துன்ப வெள்ளத்
திரைபொரு கடலை நீங்கித் துறந்துடன் செறிந்து நோற்பின்
வருமெதிர் கொள்ள வீடும் வானவ ருலகு மன்னா.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லிப் பின்னரும்), விழுமம் - இடும்பை
பொருந்திய, வெந்நோய் - ஆசையாகிய (அதாவது :
விஷயப்பற்றாகிய) நோயுள்ள, விரி - விசாலித்த, திரை -
அலைகளையுடைய கடலை, வேலி - வேலியாகவுடைய, ஞாலகாவலர்
- இப்பூமி காவலராகிய அரசர்கள், எரிபுரை - அக்னியையொத்த,
நரகத்தன்றி - நரககதியில் வீழ்வதல்லாமல்,வீழ்ந்திடார் - மற்ற மனிதர்
தேவரென்கிற கதிகளில் பொருந்தார்கள், (ஆகையால்), மன்னா -
அரசனே!, துன்பவெள்ளம் - துன்பமென்னும் நீர்ப்பெருக்கோடு கூடிய,
திரை - ஜனன மரணமென்கிற அலைகள், பொரு - ஞானமென்னும்
கரையோடு பொருதுகின்ற, கடலை - பவக்கடலை, நீங்கி - விலகி,
துறந்து - பாஹியாப்பியந்தர பரிக்கிரகங்களை விட்டு, உடன் -
உடனே, செறிந்து - பிராணி ஸம்யமம் விஷய ஸம்யமமென்னும்
ஈராறடக்கங்களைப் பொருந்தி, நோற்பின் - த்வாதசவித தபசில்
நின்றால், வானவருலகும் - தேவருலகமும், எதிர்கொள்ள -
எதிர்கொண்டு நிற்க, வீடும் - மோக்ஷமும், வரும் - உண்டாகும், எ-று.
இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (57)
870. விலையிலா மணியை விட்டுக் காசத்தை மேவ லன்றித்
தலைவனாய்த் தாயை விட்டுத் தன்னடி யாளை யோம்பல்
நிலையிலாப் போக மேவி நின்றுநல் லறத்தை நீங்க
லிலைகுலா மகரப் பைம்பூ ணேந்துதோள் வேந்த வென்றான். |