(இ-ள்.) இலை - (கம்மியரால் அமைக்கப்பெற்ற),
இலைக்கொடிகள், குலாம் - பிரகாசிக்கும், மகரம் - மகரவடிவமாகிய,
பைம் - பசுமை பொருந்திய பொன்னாலாகிய, பூண் - ஆபரணத்தை,
ஏந்தும் - தரித்த, தோள் - கைகளையுடைய, வேந்த - அரசனே!,
நிலையிலா - நிச்சயமில்லாமல் கெடுகின்ற, போகம் - இந்திரிய விஷய
போகங்களை, மேவி நின்று - பொருந்தி நின்று, நல் - நன்மையாகிய,
அறத்தை - தர்ம ஸ்வரூபமாகிய ஆத்ம ஸ்வரூப பாவனையை,
(அறிந்து பற்றாமல்), நீங்கல் - அதற்கு பகிர்முகமாக அசத் பூதங்களில்
மயங்கிச் செல்லுதல், (எப்படிப் பட்ட ஸ்வரூபமுடையதென்றால்),
விலையிலா - விலையிடுதலில்லாத (அதாவது : மேலான விலையுள்ள),
மணியை - இரத்தினத்தை, விட்டு - குணமறியாமல் விட்டு, காசத்தை -
காய்ச்சு மணியை, மேவல் - பொருந்துவதாகும், அன்றி -
அதுவல்லாமலும், தலைவனாய் - குடும்பத் தலைவனாகி, தாயை -
மாதாவை, விட்டு - ரக்ஷிக்காமல் விட்டு, தன் - தன்னுடைய,
அடியாளை - பெண்சாதியை மாத்திரம், ஓம்பல் - இரக்ஷிப்பதுமாகும்,
என்றான் - என்றும் சொன்னான், எ-று. (58)
871. கடலெனத் தோன்று நீலக் கானலை நீரென் றோடி
யுடலிழந் துழையைப் போல வுறுதியொன் றோர்வ தின்றி
யிடரினை யீனு மின்னாப் பயில்புலத் திவறிச் சென்றேன்
படுதுயர் நரகந் தன்னிற் பதைப்பனோ வடிக ளென்றான்.
(இ-ள்.) (இவற்றைக் கேட்டு இரத்தினாயுதவரசன்), கடலென -
சமுத்திரம்போல, தோன்றும் - தோற்றுகிற, நீலக்கானலை - நீல நிறம்
பொருந்திய பேய்த்தேரை, நீரென்று - ஜலமென்று, (நினைத்து), ஓடி -
சென்று, உடலிழந்த . சரீரம் விடுகின்ற, உழையைப்போல -
மானைப்போல, உறுதி - ஆத்மனுக்கு உறுதியாகிய, ஒன்று - ஒப்பற்ற
ஆத்ம குணத்தை, ஓர்வது - அறியுந்தன்மை, இன்றி - இல்லாமல்,
(அஞ்ஞானத்தால்), இடரினை - துன்பத்தை, ஈனும் - உண்டு
பண்ணுகின்ற, இன்னா - பொல்லாங்கினையே, பயில் -
பற்றியிருக்கின்ற, புலத்து - பஞ்சேந்திரிய விஷ்யங்களில், இவறி -
மிகுதியாக இச்சித்து, சென்றேன் - அப்பிரசஸ்தராகத்தில் மிகுதியாகச்
சென்றேன், (ஆகையால்), அடிகள் - ஸ்வாமிகளே!, (அந்த
அசுபோபயோக பரிண மனத்தால் பாபாஸ்ரவபந்தமாகி அந்த
பாபோதயத்தால்), படு - மிகுதியாக உண்டாகின்ற, துயர் -
துக்கங்களையுடைய, நரகந்தன்னில் - நரகத்தில், பதைப்பனோ -
(நரககதி நாமோதயத்தால் ஜனித்து) துன்பமடைவேனோ?, என்றான் -
என்று கேட்டான், எ-று.
இழந்த உழையென்பது இழந்துழையெனத் தொகுத்தலாயிற்று. (59)
872. எரியிடைப் பதங்கம் போன்று மிளம்பிடிக் களிறு போன்றுங்
கரிமதத் தளியைப் போன்றுங் கானத்தி னசுணம் போன்றும் |