கல்வியொடு புணர்ந்துகடை நல்லொழுக்க மென்பா
ரெல்லையில வெந்துயர மெய்தியுழல் கின்றார்.
(இ-ள்.) உயிர் - ஜீவன்களும், நல்வினை - புண்ணிய
கர்மாதிகளும், இறந்தவர் - மரணமடைந்தவர்கள், பிறப்பு - மறுபடி
பிறத்தலும், (ஆகிய இவைகள்), இல்லையெனச் சொல்லினவர் -
இல்லையென்று (நாஸ்திகமே பிரமாணமென்று அர்த்த அயதா
கிரஹ்ணமாகிய, முஹ்ய புத்தியினால்) சொல்லுபவர்கள், (நரகத்திற்
சென்மித்துப் புராதன நாரகர்களால்), செம்பு - செம்பை, உருக்கி -
உருக்கி, வாயிற் பெய்து - வாயிலூற்ற, (சகிக்க முடியாத துன்பமுற்று),
உயிர்வார் - பெருமூச்சு விடுவார்கள், கல்வியொடு புணர்ந்து -
வித்தையோடு சேர்ந்து (அதாவது : படித்திருந்தும் யுக்தி
குறைவினால்), நல்லொழுக்கம் - ஸம்மியக் சாரித்திரமானது,
கடையென்பார் - தாழ்ந்த நிலையென்று சொல்லுபவர்கள்,
(நரகத்திற்செனித்து), எல்லையில் - மட்டுமித மில்லாததாகிய, வெம் -
வெப்பம் பொருந்திய, துயரம் - துன்பங்களை, எய்தி -அடைந்து,
சுழல்கின்றார் - சுழலாநின்றார்கள், எ-று. (23)
953. பொய்யுரை புனைந்துபொருள் வாங்கினர்கள் கண்டாய்
கையுகிரி னூசியவை காய்ந்தசெறிப் புண்பார்
வையம்புகழ் மாதவரை வைதனர்கள் காரி
னெய்யுருக்கி வாயிற்பெய நின்றுசுழல் கின்றார்.
(இ-ள்.) பொய்யுரை - அஸத்திய வசனத்தை, புனைந்து -
அலங்காரமாக ஸ்தாபிதஞ் செய்து சொல்லி, பொருள் வாங்கினர்கள் -
அன்னியர்களின் திரவியத்தை வாங்கினவர்கள், (நரகத்திற் செனித்து),
கையுகிரின் -அவர்கள் கை நகங்களில், காய்ந்த - அக்னியில் நன்றாக
வேகப்பட்ட, ஊசியவை - இருப்பூசிகளினால், செறிப்புண்பார் -
(புராதன நாரகர்களினால்) சொருகப்பெற்றலறுபவராவார்கள், வையம் -
இந்த லோகத்திலே பவ்வியர்களினால், புகழ் - ஸ்துதிக்கும்படியான,
(ஸம்மியக்ஞானாதி குணங்களையுடையராகிய), மாதவரை -
உத்கிருஷ்டமாகிய தபசைச் சேர்ந்த மஹா முனிவரர்களை,
வைதனர்கள் - நிந்தித்தவர்கள், (நரகத்திற் பிறக்க அவர்களைப்
புராதன நாரகர்கள்),காரி - விஷத்தையும், நெய் - இரத்தத்தையும்,
உருக்கி - சேர்த்துக் காய்ச்சி, வாயில் - அவர்கள் வாயிலே, பெய -
ஊற்ற, நின்று - அந்நரகத்தில் நின்று, சுழல்கின்றார் - சுழலா
நின்றார்கள், எ-று. (24)
954. ஒழுக்கினை யழித்துட னழுக்குணர் வுரைத்தார்
புழுக்கணலி யப்புடை புடைத்துவிழு கின்றார்
வழுக்கினவர் நன்னெறியின் மத்திகை யெடுத்து
விழுப்பற வதுக்கவினை யேகொடிய தென்பார். |