சமவசரணச்சருக்கம்523


Meru Mandirapuranam
 

 1108. மாளி கைநிரை மண்டப மல்லவு
     மாளி மானவர் தேவ ரடைந்துழி
     நாளு நாளுநல் லின்பம் பயப்பன
     சூளி யானையைச் சூழ்பிடி போல்வன.

   (இ-ள்.)   மண்டபம் - அந்த  ஜெயாஸ்ரீயமண்டபமும், அல்லவும்
- அஃதல்லாதனவும்,  மாளிகை  நிரை  - உப்பரிகை ஸமூகங்களும்,
சூளி யானையை -  ஆண்  யானையையும், சூழ் - அதைச் சூழ்ந்திரா
நின்ற, பிடிபோல்  வன  - பெட்டை யானைகளையும் போல்வனவாம்
(அதாவது :   அந்த   ஜெயாஸ்ரீயமண்டபம்   ஆண்  யானையைப்
போலவும், மற்ற  மாளிகை முதலியவைகள் அதைச் சூழ்ந்த பெட்டை
யானைகளைப்  போலவும்  விளங்கும்),  ஆளி  - ஸிம்ம முதலாகிய
திரியக்   ஜீவன்களும்,   மானவர்  -   மனுஷ்யர்களும்,   தேவர் -
தேவர்களும்,  அடைந்துழி  -  அவ்வுப்பரிகைகளில்   சேர்ந்தபோது,
(அவை),  நாளு  நாளும் -  எப்பொழுதும்,  நல் -  நன்மையாகிய,
இன்பம்  -  சௌக்கியத்தை,  பயப்பன  -  கொடுப்பனவாம், எ-று.

     ஆளிமானவர் -  என்பதற்கு,  ஸிம்மம்போல் பராக்கிரமமுள்ள
மனுஷ்யர்கள் எனப் பொருளுரைப்பாருமுளர். (61)

 1109. சிப்பி செய்கை முடிந்தன செய்வினை
     துப்பு ருவை யுரைப்பன நன்னெறி
     தப்பி னார்தடு மாற்றை விரிப்பன
     விப்ப டிய விவற்றினே னைப்பல.

    (இ-ள்.)    இப்படியவிவற்றின்   -     இவ்விதமாகிய   இந்த
மண்டபத்திலும்   உப்பரிகைகளிலும்,   செய்வினை  - ஜீவர்களினால்
செய்யப்பட்ட   புண்ணிய   பாப   வினைகளின்,   துப்புருவை   -
அனுபோகங்களினது   அம்சங்களை,   உரைப்பன   -   சொல்லிக்
காட்டுவனவும்,  நன்னெறி  -  ஸத்சாரித்திரத்தினின்றும், தப்பினார் -
தவறித்    துச்சாரித்திரத்தில்    வர்த்தித்தவர்களுக்கு,    (ஏற்படும்),
தடுமாற்றை -  ஸம்ஸார   துக்கத்தை,    விரிப்பன  -  விசாலித்துத்
தெரிவிக்கப்பட்டனவும், ஏனை  -   இன்னும்  மற்ற, பல - அனேகம்
விவரங்களையுடையனவும்       (ஆகிய),         சிப்பிசெய்கை -
தேவஸ்தபதிகளாகிய சிற்பிகளுடைய  செய்கைகளெல்லாம்,  முடிந்தன
- அமைத்து முடிக்கப் பெற்றனவாம், எ-று. (62)

 1110. மந்தி ரத்தை யணிந்துபொற் பீடிகை
     யிந்தி ரத்துவ சம்மிடை நின்றன
     சந்தி ரத்திர ளின்புள கத்திடை
     வந்து நித்தில மாலைக ணான்றவே.