வைசயந்தன் முத்திச்சருக்கம் 53


Meru Mandirapuranam
 

 110. கடல்களும் மலையுங் கானும் வானமுங் கடல்கள் சூழ்ந்த
     திடர்களும் கயமு மாறும் நாளிகைப் புறவுந் தீராப்
     படுதுயர் நரக மேழும் நிகோதமும் பதேச முன்ன
     ருடல்கிடந் தழிந்தி டாத விடமில்லை யுணரி னென்றான்.

   (இ-ள்.)   உணரின்  -  ஆராய்ந்தறியுமிடத்தில்,  கடல்களும்  -
(அஸங்கியாத)  ஸமுத்திரங்களும்,  மலையும் - (மஹாமேரு முதலான)
பர்வதங்களும்,  கானும் -  (தேவாரண்ணியம்  பூதாரண்ய  முதலான)
வனங்களும்,   வானமும்   -  தேவலோகமும், கடல்கள்  சூழ்ந்த  -
ஸமுத்ரங்களினால்    சூழப்பட்ட,   திடர்களும்   -  (அஸங்கியாத)
த்வீபங்களும், கயமும் - (பத்மை முதலாகிய) தடாகங்களும், ஆறும் -
(கங்கா   முதலாகிய)  நதிகளும்,  நாளிகை -  (த்ரஸ)  நாளிகையும்,
புறவும்   -   நாளிகாபாஹ்யமும்,    படு   - உண்டாகிய,  துயர்  -
துக்கமானது,  தீரா  -  நீங்காத,   நரகமேழும்  - சப்த நரகங்களும்,
நிகோதமும்  -  நிகோதமும்,  (ஆகிய)   பதேசம் -  இப்படிப்பட்ட
லோகப்ர  தேசங்களிலே,  முன்னர் - இதற்கு   முன்னாலே,   உடல்
கிடந்து    -    (நமது  ஆத்மனாலே எடுக்கப்பட்ட) சரீரம் கிடந்து,
அழிந்திடாத - நாசத்தையடையாத, இடம் -  க்ஷேத்ரமானது, இல்லை
- இல்லாததாகும்,  என்றான்  -  என்று கூறினான், எ-று. (110)

 111. வெருவுறு துயரந் துய்த்து விலங்கினுண்  மயங்கும் போழ்தும்
    மருவியாங் கருவின் மக்கள் யாக்கையின் வருந்தும் போழ்தும்
    எரியன   நரகின்  மூழ்கி  யெழுந்துவீழ்ந்  தலறும் போழ்தும்
   அருகன சரண மல்லா லரண்பிறி தில்லை கண்டாய்.

    (இ-ள்.) வெருவுறு - பயத்தையே ஸ்வபாவமாகவடையும்,  துயரம்
-  துக்கங்களை,  துய்த்து  -  அனுபவித்து,  விலங்கினுள் - விலங்கு
கதியில்,  மயங்கும்போழ்தும் -  மயங்குகின்ற காலத்தும்,  கருவின் -
கருப்பமாகிற, ஆங்கு  -  வயிற்றகமென்னும் அவ்விடத்தில், மருவி -
சேர்ந்து, மக்கள் யாக்கையின் - மனித சரீரத்தில்,வருந்தும்போழ்தும் -
வருந்துகின்ற காலத்திலும், எரியன, அக்கினிக்குச் சமானமாகிய,நரகின்
-  நரகத்திலே,  மூழ்கி  -  வீழ்ந்து, எழுந்து வீழ்ந்து - அதினின்றும்
ஆகாயத்தில் கிளம்பித்  தலைகீழாக   வீழ்ந்து,  அலறும்போழ்தும் -
அழுகின்ற  காலத்திலும்,   அருகன்   -  அருகத்  பரமேஸ்வரனது,
சரணமல்லால்  -  பாதமல்லால்,  அரண்  -  துணையாவது, பிறிது -
வேறொன்றும்,  இல்லை - கிடையாது, எ-று.

     அருகன - இதில், அ -சாரியை, கண்டாய் - அசை. (111)

 112. இறந்தநம் பிறவி மேனா ளெண்ணுதற்  கரிய  தம்முட்
     கறந்துகொண் டுயிரை யுண்ணுங் காலன்வாய்ப் பட்ட போழ்தும்
     பிறந்துநாங் கதிக ணான்கிற்  பெருந்துய ருழக்கும் போழ்துந்
     துறந்திடா   வினைக   ளன்றித்  துணைபிறி  தில்லை கண்டாய்.