சமவசரணச்சருக்கம்597


Meru Mandirapuranam
  

குழல்    -    புள்ளாங்குழல்களும்,   கின்னரகீதம்   -    கின்னர
தேவர்களுடைய  ஸங்கீதங்களும்,  நிரந்த  - நிரம்பின, துரங்கமும் -
குதிரைகளிலும்,  மாவொடு  -  யானைவாஹனங்களிலும், மானமும் -
விமானங்களிலும்,  ஏறி -  ஏறிவந்து, விரும்பிய வண்ணம் - இச்சித்த
வண்ணமாக,   அணிந்து  -   அலங்கரித்துக்கொண்டு,  வியந்தார் -
ஆச்சரியமடைந்து ஸந்தோஷித்தார்கள், எ-று. (234)

 1282. விக்கிரி யைப்பல வெட்டு மடுத்தவ
       ரக்கிரி யைக்கண் ணழித்தவர் தம்மொடு
       பொக்க முரைத்து நடித்துட னேசிலர்
       நக்கனர் தக்கவர் நாணமொ ழிந்தே.

   (இ-ள்.)  சிலர்  -   சில   தேவர்கள்,  விக்கிரியைப்   பல   -
பலவகையாகும்   படியான   விகுர்வணைகள்,  எட்டும்  - அணிமா
முதலாகிய  மூலரித்திகள்  எட்டும்,  அடுத்தவர்  - சேர்ந்தவருடைய,
அக்கிரியைக்  கண்  -  அந்தவிகுர்வணை கிரியைகளை, அழித்தவர்
தம்மொடு  -  நீங்கும்படி  செய்கின்றவர்களுடன், பொக்கமுரைத்து -
அகஸ்யம்  பேசியும்,  நடித்து  -  நர்த்தனம் பண்ணியும்,  உடனே -
இப்படியாகச்            செய்கின்றவர்களுடனே,       தக்கவர் -
தகுதியாயுள்ளவர்களும், நாணம் ஒழிந்து - வெட்கம் நீங்கி, நக்கனர் -
சிரித்தார்கள், எ-று. (235)

 1283. வந்திகள் வந்தனை செய்திறை வன்புக
       ழந்தமி லாதன கொண்டடி தாழ்ந்தனர்
       கந்திற மோதிய காளப தாகையின்
       வந்தனர் தாம்பல ராகிய வானோர்.

     (இ-ள்.)  வந்திகள் - மங்கல பாடகர்கள், வந்தனை செய்து -
வணக்கமாக நமஸ்காரம் செய்து, இறைவன் - ஸ்வாமியினுடைய, புகழ்
- கீர்த்தியை,  அந்த மிலாதன - அளவில்லாதனவாக, (பக்தியினால்),
கொண்டு  -  ஸ்துதிகளாகப்பாடிக்கொண்டு,  அடி  -  (அவருடைய)
பாதகங்களில்,   தாழ்ந்தனர்   -   வணங்கினார்கள்,    பலராகிய -
அனேகர்களாகிய,  வானோர்  தாம்  -  தேவர்கள்,   கந்திறமோதிய
(காற்றினால்) ஸ்தம்பம் அசையும்படியாக  மோதுகின்ற, பதாகையின் -
துவஜங்களையுடையவர்களாகியும்,      காளம்   -    காளமென்கிற
வாத்தியத்தோடு கூடினவர்களாயும், வந்தனர் - வந்தார்கள், எ-று.
(236)

 1284. எழுச்சி முழாவொலி யெங்கு மியம்பப்
       பழிச்சி யெழுந்தனர் பண்ணவர் கோனை
       வழக்கினில் வந்துல கந்நடு மைமைத்
       தொழிற்கிறை சோதம னேவலி னாலே.