அதிர - அதிரும்படியாக, ஆர்க்கும் - சப்திக்கும், தோளினை -
கைகளை, துணிப்பனென்று - வெட்டுவேனென்று, வாளினை -
வாளாயுதத்தை, சுழற்றி - சுழற்றிக் கொண்டு, தோன்றும் -
தோன்றுவான், எ-று. (13)
154. அழலுமிழ்ந் திலங்கும் வெவ்வா யோரியா யழைத்துக் கத்தும்
சுழலும்வெங் கண்ண வாய வெருவையாய்ச் சுழல வோடும்
மழையெனத் துறுகற் பொய்யா மலையெடுத் திடவந் தெய்து
முழையவர் நடுங்க வெல்லா வூனமு மொருங்கு செய்யும்.
(இ-ள்.) அழல் - அக்கினியை, உமிழ்ந்து - சொரிந்து, இலங்கும்
- விளங்கும், வெவ்வாய் - வெப்பம்பொருந்திய வாயையுடைய,
ஓரியாய் - குள்ளநரியாகி, அழைத்து - குரல்கொடுத்தழைத்து, கத்தும்
- கூவுவான், சுழலும் - சுழல்கின்ற, வெம் - வெப்பம்பொருந்திய,
கண்ணவாய - கண்களையுடையதாகிய, வெருவையாய் -
கோட்டானாகி, சுழல - சூழ, ஓடும் - ஓடுவான், மழையென -
மேகமானது மழையைச் சொரிவதுபோல, துறுகல் - பெரிய கற்களை,
பெய்யா - சொரிந்து, மலை - பர்வதத்தை, எடுத்து - தூக்கி, இட -
இவர்பேரில் போடும்படியாக, வந்தெய்தும் - வந்தடைவான், உழையவர்
- பக்கத்திலிராநின்ற தனது ஏவலாளர் யாவரும், நடுங்க -
பயப்படும்படியாக, எல்லா வூனமும் - மிதமில்லாத
பொல்லாங்குகளெல்லாம், ஒருங்கு - ஒரு தன்மையாக, செய்யும் -
செய்யாநின்றவனானான், எ-று. (14)
155. இனையன பலவுஞ் செய்ய விறைவனு மிவையெ லாமென்
வினையின பயன்க ளென்றே வெகுண்டிலன் வினைகண மேலே
நினைவினை நிறுத்தி நின்றா னீசனு நீங்கிப் போகித்
தனதிடங் குறுகி யாருஞ் சலித்தெழும் படியிற் சொன்னான்.
(இ-ள்.) இனையன - இத்தன்மையனவாகிய, பலவும் - அநேகம்
உபசருக்கங்களையும், செய்ய - அவன் செய்யவும், இறைவனும் -
சஞ்சயந்த முனிவனும், இவையெலாம் - இவைகளெல்லாம், என் -
என்னுடைய, வினையின - கருமங்களினது, பயன்களென்று -
பலனாகுமென்று, வெகுண்டிலன் - (அவ்வித்துத்தந்தனைக்)
கோபிக்காதவனாகி, வினைகள்மேலே - தனது கருமங்களின்மேலே,
நினைவினை - தியானத்தை, நிறுத்தி - ஸ்தாபித்து, நின்றான் -
யோகத்தில் நின்றான்,நீசனும் - நீசத்தன்மையனான வித்துத் தந்தனும்,
நீங்கிப்போகி - அவரைவிட்டு நீங்கிப்போய், தனதிடம் - தனது
நகரத்தை, குறுகி - அடைந்து, யாரும் - எவர்களும், சலித்து -
சலனத்தை அடைந்து, எழும்படி - தன்னுடன்கூட வரும்படியாக,
சொன்னான் - (சில உபாய வசனங்களைச் சொல்லினான்,
எ-று.
ஏ - அசை. (15) |