156. பிலமென்ப் பெரிய வாயன் பிணமலா லொன்றுந் தின்னான்
மலைபல விழுங்கினாலும் வயிறொன்று நிறைதல் செல்லான்
பலபகல் பசியின் வாடிப் பதைப்பின்றி யத்தம் பெற்றா
லலைபல செய்து நம்மை விழுங்கவந் தரக்க னின்றான்.
(இ-ள்.) அரக்கன் - ஓர் இராக்கதன், பிலமென -
பர்வதக்குகைபோல, பெரிய - பெரியதாகிய, வாயன் -
வாயையுடையவன், பிணமலால் - பிரேதங்களேயல்லாமல், ஒன்றும் -
யாதொன்றும், தின்னான் - தின்னமாட்டான், மலைபல - பல
பர்வதங்களை, விழுங்கினாலும் - தின்றாலும், வயிறு - வயிறானது,
ஒன்றும் - கொஞ்சமும், நிறைதல் செல்லான் - நிறையாதவனாவான்,
(அவன்) பலபகல் - அநேக நாள்கள், பசியின் - பசியினால், வாடி -
வாட்டமுற்று, பதைப்பின்றி - அவசரமில்லாமல், அத்தம் பெற்றால் -
ஸூர்யாஸ்தங்கதமானால், அலைபலசெய்து - பலவாகிய வருத்தங்கள்
செய்து, நம்மை - நம்மெல்லாரையும், விழுங்க - விழுங்கும்படியாக,
வந்து - இவ்விடத்தில் வந்து, நின்றான் - இராநின்றான், எ-று. (16)
157. இன்றிரா நம்மை யெல்லாம் பிடித்தவ னடையத் தின்னும்
இன்றிரா வாரா முன்னே யீண்டுநா மடையக் கூடி
இன்றிரா வண்ணஞ் செய்யா தொழிதுமே லிழந்தும் வாழ்நாள்
என்றிடா வெவர்க்குஞ் சொன்னா னெரிநர கத்து வீழ்வான்.
(இ-ள்.) இன்று - இன்றையதினம், இரா - இராத்திரிக்கு, நம்மை
யெல்லாம் - நம்மெல்லோரையும், பிடித்து - கைப்பற்றி, அவன் -
அவ்விராக்ஷதன், அடைய - ஒருமிக்க, தின்னும் - தின்னுவான்,
(ஆகையால்) இன்றிரா - இன்றைய விராத்திரி, வாராமுன்னே -
வருவதற்குள்ளாக, ஈண்டு - இவ்விடத்தில், நாம் - நாமனைவரும்,
அடைய - ஒருங்காக, கூடி - சேர்ந்து, இன்று - இன்றையதினம்,
இராவண்ணம் - அவன் இவ்விடத்தி லிராதவிதமாக, செய்யாது -
செய்யாமல், ஒழிதுமேல் - விடுவோமேயானால், வாழ்நாள் - நமது
ஆயுஷ்யநாளை, இழந்தும் - இழந்துவிட்டோம், என்றிடா - என்று,
எவர்க்கும் - அந்த நகரத்திலுள்ள யாவருக்கும், எரி - அக்கினி
போன்ற, நரகத்து - நரகத்திலே , வீழ்வான் - வீழ்வதற்குக்
காரணமான குரோதமுடைய வித்துத்தந்தன், சொன்னான் -
சொல்லினான், எ-று. (17)
158. எமக்கிவன் செய்த குற்ற மில்லையென் றிகழ வேண்டாம்
உமக்குநா னுறுதி சொன்னே னுரைத்ததும் பின்னை மெய்யாஞ்
சுமக்கலா மலைக ளேந்திச் சொரிந்தவன் றன்னைக கொன்மின்
எமக்கிவன் செய்த வின்னாப் பின்னையு மறிந்து கொண்மின். |