வேறு.
168. விளங்கு வாளெயி றிலங்கநக் குருமெனத் தெழியாப்
புளங்கொள் கார்முகி லெனவிழி யாப்பொடித் தெழுந்தான்
துளங்கு சுக்கிலத் தியானவா டுளக்கறப் பிடியாக்
களங்கொள் சிந்தையன் பசலைநித் திரைகளைக் கடிந்தான்.
(இ-ள்.) விளங்கு - விளங்குகின்ற, வாள் - ஒளிபெற்ற, எயிறு -
பற்கள், இலங்க - பிரகாசிக்க, நக்கு - நகைத்து, உருமுஎன -
இடியைப்போல, தெழியா - கர்ஜித்து, புளங்கொள் -
வேகத்தைக்கொண்ட, கார் - கறுத்த, முகிலென - மேகம்போல,
விழியா - கண்ணைவிழித்து, பொடித்து - மயிர் சிலிர்த்து, எழுந்தான் -
(வித்துத்தந்தன்) உபத்திரவஞ்செய்ய எழுந்தான், (அப்போது) துளங்கும்
- பிரகாசியாநின்ற, சுக்கிலத்தியானவாள் - இரண்டாவது
சுக்கிலத்தியானமாகிய ஏகத்துவ விதர்க்க விசாரமென்னும்
வாளாயுதத்தை, துளக்கற -சலனமின்றி, பிடியா - பிடித்து, களங்கொள்
- மனதிடமாகக்கொண்ட, சிந்தையன் - தியானத்தையுடைய
சஞ்சயந்தமுனி, (க்ஷீணகஷாய குணஸ்தானத்தின் அந்தியத்தில்
இரண்டுஸமயத்தின் முதல் ஸமயத்திலே) பசலை நித்திரைகளை -
ப்ரசலை நித்திரையென்னுமிரண்டு கருமப்பிரகிருதிகளை, கடிந்தான் -
விலக்கினான், எ-று. (28)
169. கணங் கடந்தபின் கண்மிசை நால்வரைக் காணாப்
பிணங்கு மெல்லையு ளறிவினைச் செறிவுறுத் தைவர்
இணங்கி வந்தைவ ரிடையுறு மவரொடு மெதிர்ந்தார்
மணந்து மற்றவ்வீ ரெழுவருங் கணத்திலே மடிந்தார்.
(இ-ள்.) கணங்கடந்தபின் - முதல் ஸமயம் நீங்கினபிறகு,
கண்மிசை நால்வரை - தரிசனாவரணீயமென்னும் நால்வரை, காணா -
பார்த்து, பிணங்குமெல்லையுள் - அவர்களுடன் போராடுங்காலத்தில்,
அறிவினைச் செறிவுறுத்தும் - ஞானத்தைத் தடைசெய்யும், ஐவர் -
ஞானாவரணீயமாகிய ஐவரும், இணங்கி வந்து - சேர்ந்துவந்து, ஐவர்
இடையுறும் அவரொடும் - அந்தராயமென்கிற ஐவருடனே கூடி,
எதிர்த்தார் - எதிர்ந்தார்கள், மணந்து - அப்படிச்சேர்ந்து, அவ்வீ
ரெழுவரும் - அந்தப்பதினாலு பிரகிருதிகளும், கணத்திலே -
க்ஷீணகஷாய குணஸ்தானத்தின் அந்திய சமயத்திலே, மடிந்தார் -
நாசமானார்கள், எ-று.
இவ்விடத்தில் தரிசனாவரணீயம் நான்காவன :-
சக்ஷுதரிசனாவரணீயம், அசக்ஷுதரிசனாவரணீயம், அவதி
தரிசனாவரணீயம், கேவலதரிசனாவரணீயம் என்பனவாம்.
ஞானாவரணீயம் ஐந்தாவன :- மதிஞானாவரணீயம், ஸ்ரீத
ஞானாவரணீயம், அவதிஞானாவரணீயம், மனப்பரிய ஞானாவரணீயம், கேவல ஞானாவரணீயம் என்பனவாம். |