சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 93


 

 193. கண்டவன் கலைக ளெல்லாங் கடந்துப சாந்தி சென்ற
     பண்டித னொருவ னாகிப் பாதம்வாய் கைமு கத்தாற்
     புண்டரீ கத்தை வென்று புலமையை நடிப்பான் போலக்
     கொண்டதோர் வேடந் தன்னா லிறைவனைக் குறுக வந்தான்.

     (இ-ள்.)   கண்டவன்    -   அவ்விதமறிந்த   தரணேந்திரன்,
கலைகளெல்லாம் - கலைஞானங்களையெல்லாம், கடந்து - கரைகண்டு,
உபசாந்திசென்ற  - சாந்த  பரிணாமமடைந்த, பண்டிதனொருவனாகி -
ஒரு வித்துவானுக்குச்   சமானமாகி,  பாதம் - பாதத்தினாலும், வாய் -
வாயினாலும்,  கை   -   கைகளாலும்,   முகத்தால் - முகத்தினாலும்,
புண்டரீகத்தை  - தாமரை மலரை, வென்று - ஜெயித்து, புலமையை -
வித்வத்திறத்தை, நடிப்பான் போல - அபிநயத்தால் காட்டுவான்போல,
கொண்டது  -  தன்னால்  நிர்மித்துக்  கொள்ளப்பட்டதாகிய,   ஓர் -
ஒப்பற்ற,  வேடந்தன்னால்  -  ரூபத்தால்  (அதாவது :  ரூபத்தோடு),
இறைவனை  - தலைவனை, குறுக - அடைய (சமீபத்தில்), வந்தான் -
வந்து சேர்ந்தான், எ-று.                                   (53)

 194. வந்தவன் மைந்தர் செய்கை வடிவுகண் டுவந்து வானிற்
     சுந்தர மலர்க டூவி யிறைவனை வணங்கிச் சொன்னா
     னிந்திரர்க் கிறைவன் செந்தா மரையடிக் கிசைவி லாத
     வந்தரம் பலவுஞ் செய்தீ ரறிவிலீர் போக வென்றான்.

     (இ-ள்.) வந்தவன் - அவ்வாறு வந்த தரணேந்திரன், மைந்தர் -
இக்  குமாரர்களுடைய,   செய்கை   -   செய்கையையும்,  வடிவு -
ரூபத்தையும்,  கண்டு  - பார்த்து, உவந்து - சந்தோஷித்து, வானில் -
ஆகாயத்தினின்றும்,  சுந்தரம்  -  அழகிய, மலர்கள் - புஷ்பங்களை,
தூவி  - இறைவன்மேற் சொரிந்து, இறைவனை - ஸ்வாமியை, வணங்கி
-  நமஸ்கரித்து,  சொன்னான்  -  சொல்லினான்,  (என்னவென்றால்),
இந்திரர்க்கு  - தேவேந்திரர் முதலானவர்களுக்கெல்லாம், இறைவன் -
நாதனாகிய     ஸ்வாமியினது,     செம்  -    சிவந்த,   தாமரை -
தாமரைப்பூப்போன்ற,    அடிக்கு   -  பாதங்களுக்கு, இசைவிலாத -
பொருந்தாத, அந்தரம்  பலவும்  - பல விக்கினங்களையும், செய்தீர் -
உண்டுபண்ணினீர்கள், அறிவிலீர்  -  புத்தியில்லாதவர்களே!, போக -
இவ்விடம்   விட்டு  நீங்கிப்   போகக்கடவீராக, என்றான்   - என்று
சொல்லினான், எ-று.                                      (54)

 195. என்றலுங் குமரர் சொன்னா ரிறைவன்றன் பெருமை யாமே
     யொன்றிமற் றறிது நீர்போ முங்கரு மத்து மேலே
     யன்றெனி லறிவி லாமை யும்மைவந் தடையு மென்றார்க்
     கின்றுநீ ரிறைவன் றன்னை யிரக்கின்ற தென்கொ லென்றான்.