207. உனக்கிவன் றமைய னாய பிறப்புநீ யறிந்த தொன்றே
உனக்குமு னிவனு மாய பிறப்பெண்ணி லுரைக்க லாற்றா
வினைக்குவித் தீட்ட வேண்டா வெகுளியைப் பெருக்கி மெய்ம்மை
நினைத்திடிற் சுற்ற மன்றி நின்றவ ரில்லை கண்டாய்.
(இ-ள்.) (அதைக்கேட்டு) உனக்கு - உனக்கு, இவன் -
இச்சஞ்சயந்தன் - தமையனாய - அண்ணனாகிய, பிறப்பு ஒன்றே -
இவ்வொரு பிறப்பே, நீ - நீ, அறிந்தது - தெரிந்தது, உனக்கு -
உன்றனக்கு, முன் - முன்னே, இவனும் - இச்சஞ்சயந்தனும், ஆய -
உண்டாகிய, பிறப்பு - பிறப்புக்களை, எண்ணில் - இத்தனையென்று
எண்ணினால், உரைக்கல் - வசனத்தினாற் சொல்வது, ஆற்றா -
முடியாது, (அதாவது : அனந்தமாயிராநின்றன; ஆகையால்),
வெகுளியை - கோபத்தை, பெருக்கி - விருத்தியாக்கி, வினைக்கு -
கருமங்களுக்கு, வித்து - விதையை, ஈட்டவேண்டா -
சம்பாதிக்கவேண்டாம், மெய்ம்மை - (பிறப்பினது) உண்மையை,
நினைத்திடில் - நினைக்குமிடத்தில், சுற்றமன்றி - பந்துக்களல்லாமல்,
நின்றவர் - இருக்கப்பட்டவர், இல்லை - இவ்வுலகத்தில்
ஒருவருமில்லை, எ-று.
கண்டாய் - அசை. (67) வேறு.
208. வருதிரை மணலினும் வளியி னாற்றிரள்
சருகிலை போலவுஞ் சாயை போலவும்
மருவிய வினைவசம் வருவ தல்லதிங்
கொருவர்க ணுறவொரு நாளு மில்லையே.
(இ-ள்.) திரை - சமுத்திரத்தில் (அலைகளினாலே), வரு -
வரப்பட்டிருக்கிற, மணலினும் - மணலைப்போலவும், வளியினால் -
காற்றினால், திரள் - கூடப்பட்ட, சருகிலைபோலவும் - காய்ந்த
இலைபோலவும், சாயைபோலவும் - தன்நிழலானது
தன்னுடனிற்பதுபோலவும், மருவிய - சேர்ந்திராநின்ற, வினைவசம் -
கர்மவசத்தினால், வருவதல்லது - வருவதேயல்லாமல், இங்கு -
இவ்விடத்தில் (அதாவது : ஸம்ஸாரத்தில்), ஒருவர்கண் -
ஒருவரிடத்தில், உறவு - நிலையான பந்துத்துவமானது, ஒருநாளும் -
ஒரு தினமும், இல்லை - கிடையாது, எ-று. (68)
209. மின்னினு மிகைநனி தோன்றி வீதலின
மன்னிய வுயிர்தமின் மருவி லாதன
முன்னைமூ வுலகினு ளில்லை யாயினும்
பின்னிய வுறவிது பெரிது மில்லையே. |