முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
101

11

11

         1கரவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை
        வரன்நவில் திறல்வலி அளிபொறை யாய்நின்ற
        பரன்அடி மேற்குரு கூர்ச்சட கோபன்சொல்
        நிரல்நிறை ஆயிரத்து இவைபத்தும் வீடே.

   
பொ-ரை : திடமான ஆகாயமும், நெருப்பும், காற்றும், தண்ணீரும், மண்ணும் என்னும் இவற்றின் தன்மைகளான சிறந்த ஒலியும், தெறலும், வலியும், தண்ணளியும், பொறுத்தலும் ஆகிய இவையாகி நின்ற இறைவனுடைய திருவடிகளின்மேல், திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த, முறைமுறையாக நிறுத்தப்பட்ட ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களும் அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினை அளிக்கக் கூடியனவாம்.

    வி-கு : தெறல் என்பது ‘திறல்’ என மருவிற்று.

    ஈடு : முதற்பாட்டிலே, இறைவன் நற்குணங்களையுடையவனாக இருத்தல், அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினையுடையவனாக இருத்தல் ஆகிய இவற்றை அருளிச்செய்து, இரண்டாம் பாட்டிலே மேற்கூறப்பட்டனவற்றிற்கு எல்லாம் பற்றுக்கோடாக உள்ள இறைவன், உயிர்ப்பொருள் உயிரல் பொருள் ஆகிய இவற்றின் தன்மைக்கு வேறுபட்டவன் என்று அருளிச்செய்து, மூன்றாம் பாட்டிலே, மோக்ஷ உலகத்தைப் போன்றே அவனுக்கு உரிமைப்பட்ட தன்மையால் அந்தரங்கமாய்த் தோன்றுகிற லீலாவிபூதி 2யோகத்தை அனுபவித்தார்; நாலாம் பாட்டிலே, அந்த லீலா விபூதியிலுள்ள பொருள்கள் அனைத்தும் அவனுக்கு அதீனம் என்றார்; ஐந்தாம் பாட்டில், அவற்றை அளித்தலும் அவன் அதீனம் என்றார்; ஆறாம் பாட்டில், தொழில் செய்தலும் செய்யாமையும் அவன் அதீனம் என்றார்; ஏழாம்பாட்டில், உடலுக்கும் உயிருக்கும் உள்ள இலக்கணம் உலகிற்கும் இறைவனுக்கும் உண்டு ஆகையாலே, உலகிற்கும்

 

1. ‘மண் திணிந்த நிலனும், நிலன் ஏந்திய, விசும்பும், விசும்பு தைவரு வளியும்,
  வளித்தலைஇய தீயும், தீமுரணிய நீரும் என்றாங்கு, ஐம்பெரும்பூதத்து
  இயற்கை போலப், போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும், வலியுந்
  தெறலும் அளியு முடையோய்’ (புறம். 2.) ‘நின்வெம்மையும் விளக்கமும்
  ஞாயிற்று உள; நின் தண்மையும் சாயலும் திங்களுள் உள; நின் சுரத்தலும்
  வண்மையும் மாரிஉள; நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள; நின்
  நாற்றமும் வண்மையும் பூவை உள; நின் தோற்றமும் அகலமும் நீரின்
  உள; நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள’ (பரிபா. 4 : 25 - 31) என்னும்
  பகுதிகள் இத்திருப்பாசுரத்தின் முதல் இரண்டு அடிகளோடு ஒப்பு
  நோக்கத்தக்கன


2. யோகம் - சேர்க்கை.