முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
111

விஷ்ணு உன் மனத்திலே இருக்கின்றான்; அவனோடு விவாதம் இன்றி இருந்தால் போதும்; அதுவே உனக்குப் பேற்றினை அளிக்க வல்லது; பேற்றினைக் குறித்துப் புண்ணிய தீர்த்தங்கள் புண்ணியத் தலங்கள் தேடிப் போதல் வேண்டா,’ என்னுமது இங்கு ஒப்பு நோக்கல் தகும்.

(1)

13

        மின்னின் நிலைஇல, மன்உயிர் ஆக்கைகள்
        என்னும் இடத்துஇறை, உன்னுமின் நீரே.

    பொ-ரை : நிலை பெற்ற உயிர்கள் தங்கியிருக்கின்ற உடல்கள் தோன்றி மறையும் மின்னலைக்காட்டிலும் நிலை இல்லாதனவாம் என்று சொல்லுமிடத்து, நீங்களே அதனைச் சிறிது நினைத்துப் பாருங்கள் என்பதாம்.

    வி-கு : ‘மின்னும் மொக்குளும் என நனி வீயினும் வீயும்’ என்றார் தேவரும், (சிந். 2754) ‘மன்னுயிர் எல்லாந் தொழும்’ என்றார் திருவள்ளுவர்.  (குறள். தவ. 8.) இறை - சிறிது. இனி, இறைவன் என்று பொருள் கூறலுமாம்.

    ஈடு :
இரண்டாம் பாட்டு. ‘இறைவனிலும் வேறுபட்ட பொருள்களை விட்டுச் சர்வேஸ்வரனான இறைவன் பக்கலிலே ஆத்துமாவைச் 1சமர்ப்பிக்கப் பாருங்கோள்,’ என்றார் முதற்பாட்டில்; ‘இறைவனிலும் வேறுபட்ட பொருள்களை விடச்சொல்லுகின்றீர்; அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்தனவற்றை இப்போதாக விடப்போமோ?’ என்ன, அவற்றினுடைய குற்றங்களைக் கண்ட அளவில் விடலாம் என்கிறார் இதில்.

    மின்னின் நிலை இல - மின்னலைப் போன்றும் நிலையினையுடைய அல்ல. மின்னல் - அற்பமாய் நிலையற்றதாயிருக்கும்; இவ்வுடலும், அங்ஙனம் நிலையற்றதாய் இருந்தும், நிலையான அறிவினைப் பிறப்பித்துக் கேட்டோடே முடித்துவிடும். சந்தனம் என்ற மயக்கத்தாலே நாற்றம் குளிர்த்தி மென்மைகளைக்கொண்டு பாம்பின் மேலே கையினை வைத்துக்கொண்டு ஒருவன் கிடந்து உறங்கா நின்றால், ஓர் அறவோன் ‘இது பாம்பு’ என்று அறிவித்தால், பின்னை அதனினின்றும் கைவாங்கி அல்லது நிற்கவொண்ணாதே! அப்படியே, மற்றைப் பொருள்களிலே இன்பமுள்ளதாக நினைந்து செல்லுகின்ற இவனுக்கு ‘அவை அற்பம், நிலையற்றவை’ என்று குற்றங்களைக் காணும்படி செய்யவே விடத்தக்கனவாக இருக்குமாதலின், ‘மின்னின் நிலையில’ என்கிறார்.

 

1. சமர்ப்பித்தல் - நன்றாகக் கொடுத்தல்.