முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
118

New Page 1

‘இடையூறு’ என்றது, கைவல்ய அனுபவத்தினை. ‘ஆயின், அதனை இடையூறு என்றால் பொருந்துமோ?’ எனின், இந்திர பதத்தினைக் கோலுமவன், இல்வருகு உண்டான ஐஸ்வர்யத்தைக் கோலான்; பிரஹ்மபதத்தை ஆசைப்படுமவன், இவ்வருகு உண்டான இந்திர பதத்தில் கண் வையான்; கைவல்யத்தை (ஆத்துமானுபவத்தை) ஆசைப்படுமவன் ஐஸ்வர்யம் முதலியவைகளில் கண் வையான்; எல்லா நற்குணங்களையுமுடையனாய் திவ்வியமங்கள விக்கிரகத்தையுடையவனாய் இருக்குமவனைப் பற்றுமவன் இவை இத்தனையிலும் கண் வையான்; ஆக, இங்ஙனம், இவை ஒன்றற்கு ஒன்று இடையூறு ஆதல் காண்க.

    அற்றது பற்று எனில் - உடலும் உடல் சம்பந்தமான பொருள்களும் ஆன இவற்றில் உண்டான ஆசை நீங்கியது என்னில். உயிர் வீடு உற்றது - ஆத்துமா மோக்ஷத்தை அடைந்தது; ‘அடையல் உறும்’ என்றபடி வேறுபட்ட ஞானத்தையும் சொரூபத்தினையுமுடைய உயிர்ப்பொருளுக்கு உடலின் சேர்க்கையால் மறதி உண்டாகிறது; அம்மறதி யோகத்தின் பயிற்சியால் நீங்கினவாறே சொரூபம் பிரகாசிக்கும்; அது நித்தியமாய் ஞான ஆனந்தங்களாய் இருக்கையாலே ‘இது தன்னையே அனுபவிக்க அமையாதோ! என்று தன் பக்கலிலே கால் தாழப்பண்ணும்; அங்கு அனுபவிக்கும் அவ்வின்பத்தினையே இங்கு ‘வீடு’ என்கிறார். அது செற்று - அதனை முகஞ்சிதறப் புடைத்து. மன் உறில் - மன்ன உறில், அதாவது, தன்னைப் பற்றினால் ‘இன்னமும் அதற்கு அவ்வருகே ஓர் அனுபவம் உண்டு’ என்று இருக்க வேண்டாதபடியான நிலை நின்ற உறுதிப் பொருளைப் பற்றப் பார்க்கில் என்றபடி.

    அற்ற இறை பற்று - அடைகின்ற காலத்திலே அவனுக்கு என்று அறுதி செய்து, சேஷியான அவனைப் பற்றப் பார். இனி, இதற்கு 1‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு’ என்கிறபடியே, ‘இறைவனைப் பற்றி இதனை அறுப்பதற்குப் பார்ப்பாய்’ என்று உரைத்தலுமாம். 2இப்பொருளுக்குப் ‘பற்று’ என்னும் முற்றை எச்சமாக்கி, ‘அற்று’ என்னும் எச்சத்தை முற்றாக்குக.

(5)

17

        பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன்
        பற்றிலை யாய்அவன், முற்றில் அடங்கே.

 

1.  மூன்றாந்திருவந்தாதி, 14.